போலி மருந்து வழக்கு - சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய உள்துறை அனுமதி
- சென்னையை சேர்ந்த லூபின் நிறுவனம் அளித்த புகாரின்பேரில் ராஜா, விவேக் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
- இவ்வழக்கில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:
போலி மருந்து குறித்து சன்பார்மா நிறுவனம் அளித்த புகாரின் பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிந்து ராணா, மெய்யப்பன் ஆகியோரை கைது செய்தனர்.
தொடர்ந்து கோர்ட் அனுமதியுடன் கம்பெனி, குடோன்கள், தலைமை அலுவலகம் உள்ளிட்ட 13 இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.200 கோடிக்கு போலி மருந்துகள், பல கோடி சொத்துக்கள், தங்க, வைர நகைகள் சிக்கின.
இந்த நிலையில் இந்த வழக்கில் கவர்னர் உத்தரவின்பேரில், எஸ்.பி., நல்லாம்பாபு தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை தொடங்கினர். உடன், வழக்கில் முன்ஜாமின் பெற்று தலை மறைவான ராஜா (எ) வள்ளியப்பன், விவேக் ஆகியோர் கடந்த 10-ந்தேதி கோர்ட்டில் சரணடைந்தனர்.
இருவரையும் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்தனர். அதில் கிடைத்த தகவலின் பேரில், 9 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில், சென்னையை சேர்ந்த லூபின் நிறுவனம் அளித்த புகாரின்பேரில் ராஜா, விவேக் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழுவினர் ஜெயிலில் அடைக்கப்பட்ட ராஜாவை, நீதிமன்ற அனுமதி பெற்று கடந்த 18-ந் தேதி முதல் காவலில் வைத்து விசாரித்து வந்தனர்.
அதில் கிடைத்த தகவலின் பேரில் ராஜாவின் பங்குதாரரான என்.ஆர்.காங்., பிரமுகர் மணிகண்டன் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். மேலும் ஜி.எஸ்.டி., செலுத்துவதில் மோசடி செய்ய உதவிய முன்னாள் ஐ.எப்.எஸ்., அதிகாரி சத்தியமூர்த்தியை கைது செய்தனர். மேலும் ஜி.எஸ்.டி., அலுவலக கண்காணிப்பாளரை தொடர்ந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் பல மாநிலங்களை சேர்ந்தவர்களின் தொடர்பு உள்ளதால், வழக்கை சி.பி.ஐ., மற்றும் என்.ஐ.ஏ., விசாரணைக்கு பரிந்துரை செய்து கவர்னர் உத்தரவிட்டார். இந்த நிலையில் ராஜாவின் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. அதனையொட்டி, சிறப்பு புலனாய்வு குழுவினர், ராஜாவை நேற்று மாலை மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
இதற்கிடையே, கவர்னர் உத்தரவை தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்து நேற்று மாலை உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இன்னும், ஓரிரு நாளில் இவ்வழக்கின் விசாரணை அறிக்கை மற்றும் கோப்புகளை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை சிறப்பு புலனாய்வு குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.
போலீஸ் காவலில் ராஜா அளித்த தகவலின் பேரில் போலி மருந்து தயாரிக்க உதவியது தொடர்பாக அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்த ஜெகன் என்ற மருதமுத்து (வயது42) சொக்கலிங்கம், (43) ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இதன்மூலம் இவ்வழக்கில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சொக்கலிங்கம், திருபுவனைபாளையத்தில் உள்ள மருந்து கம்பெனியில் மெஷின் ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார். ஜெகன் என்ற மருதமுத்து (42) வேன் டிரைவர் மருந்தை சென்னைக்கு எடுத்துச் சென்று வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து வந்தார்.