புத்தாண்டை கொண்டாட புதுச்சேரியில் குவியும் சுற்றுலா பயணிகள்- இலவச பேருந்து சேவைக்கு ஏற்பாடு
- புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- சுற்றுலா பயணிகள் வசதிக்காக 10 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்து மிடங்கள்.
புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகையால் புதுச்சேரியில் தங்கும் விடுதிகள் நிரம்பி விட்டன.
தொடர்ந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு படையெடுப்பதால் நகர வீதிகள் எங்கும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் வலம் வருகிறார்கள். இதனால் புதுச்சேரி முழுவதும் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.
நாளை மறுநாள் நள்ளிரவு கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறுவதால் சுற்றுலா பயணிகள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நித்யா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு, வருகிற 31-ந் தேதி இரவு கடற்கரை சாலை மற்றும் நகர மைய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெருமளவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து ஒழுங்கு மற்றும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு 31-ந் தேதி மதியம் 2 மணி முதல் ஜனவரி 1-ந் தேதி காலை 9 மணி வரை, ஒயிட் டவுன் பகுதியின் உள்ளே வாகனங் கள் செல்ல அனுமதியில்லை.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக புதுச்சேரி கடற்கரை நோக்கி வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக 10 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்து மிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களை தற்காலிக வாகன நிறுத்து மிடங்களில் நிறுத்திவிட்டு, அங்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ள கட்டணமில்லா பேருந்து சேவைகளை பயன்படுத்தலாம்.
கடற்கரைக்கு செல்ல 30 தற்காலிக சிறப்பு கட்டணமில்லா பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் எளிதில் வழிகாணும் வகையில், சுமார் 400 போக்குவரத்து வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், முக்கிய சந்திப்புகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.