புதுச்சேரி

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி உறுதி - எல்.முருகன்

Published On 2026-02-07 13:18 IST   |   Update On 2026-02-07 13:18:00 IST
  • 2047-க்குள் நீர் வழி போக்குவரத்து சாத்தியக் கூறுகள் அனைத்தும் ஆராயப்படும்.
  • பிரதமர் சென்னை வருகை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரும் பலம் அளித்துள்ளது.

புதுச்சேரி:

மத்திய இணை மந்திரி எல்.முருகன் புதுச்சேரியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய பட்ஜெட் இப்போது தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு கூடுதலாக 10 சதவீத நிதி கோரியுள்ளனர். இதன் பின்னர் தான் மாநிலம், யூனியன் பிரதேசத்துக்கு நிதி ஒதுக்கப்படும். புதுச்சேரியை நிதி கமிஷனில் சேர்க்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

புதுச்சேரியில் 800 ஏக்கரில் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் 6 ஆயிரம் இளைஞர்கள் நேரடியாக வேலைக்கு சேர்ந்துள்ளனர். நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்த பிரதமர் கவனம் செலுத்தி வருகிறார்.

2047-க்குள் நீர் வழி போக்குவரத்து சாத்தியக் கூறுகள் அனைத்தும் ஆராயப்படும். புதுச்சேரி, தமிழகம், ஒடிசா, ஆந்திரா, கேரளாவை இணைத்து சாலை, ரெயில் வளர்ச்சி, கிழக்கு கடற்கரை சாலை வளர்ச்சியை நாம் எதிர்பார்க்கலாம். சென்னை, ராமேஸ்வரம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.

கிழக்கு கடற்கரை சாலை மார்க்கம் 2047-க்குள் மிகப் பெரிய வளர்ச்சியடையும். வளர்ச்சியடைந்த பாரதம் நோக்கி செல்லும்போது அனைத்து மாநிலமும், அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து வளர்ச்சியடைவர். அதற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்ப்பட்டுள்ளது.

பிரதமர் சென்னை வருகை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரும் பலம் அளித்துள்ளது. மீண்டும் பிரதமர் தமிழகம், புதுச்சேரிக்கு வருவார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரும். பல கட்சி களோடு பேசி வருகிறோம். தேர்தலுக்காக பட்ஜெட் தயாரிப்பவர்கள் பா.ஜ.க.வினர் அல்ல, நாட்டின் வளர்ச்சி, தொலைநோக்கு பார்வை, வளர்ச்சியடைந்த பாரதம் நோக்கி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. 5 மாநில தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரும் வெற்றி பெறும்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி செய்யப்பட்ட ஒன்று, தி.மு.க. வீட்டுக்கு செல்லும் நாள் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. தி.மு.க. கூட்டணியில் இன்று வரை யார் உள்ளார்கள்? என்றே தெரியவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் கட்சி தலைவர்கள் ஒருங்கிணைந்து கூட்டத்தையே நடத்தி விட்டோம். எங்கள் கூட்டணி, வலுவான கூட்டணி, ஆட்சி அமைக்கும் கூட்டணி.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News