புதுச்சேரியில் புத்தாண்டையொட்டி 1500 போலீசார் பாதுகாப்பு- ஒயிட் டவுன் பகுதியில் வாகனங்கள் செல்ல தடை
- வெளிமாநில சுற்றுலா பயணிகள் வாகனங்கள் நிறுத்த 8 இடங்களில் வாகன நிறுத்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- நகரப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக 30 அரசு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்ராய் ஆகியோர் வருகையையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் புத்தாண்டையொட்டி எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். இதில் புதுவை போலீஸ் டி.ஜி.பி. ஷாலினிசிங், ஐ.ஜி.அஜித் குமார்சிங்லா, டி.ஐ.ஜி.சத்திய சுந்தரம் மற்றும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் சூப்பிரண்டுகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்தவுடன். அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. புத்தாண்டை முன்னிட்டு சட்டம்-ஒழுங்கு போலீசார் 1,000 பேரும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த 500 போலீசாரும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
புத்தாண்டுக்கு முந்தைய நாள் (31-ந்தேதி) ஒயிட் டவுன் பகுதிகளில் மதியம் 2 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும். வெளிமாநில சுற்றுலா பயணிகள் வாகனங்கள் நிறுத்த 8 இடங்களில் வாகன நிறுத்த வசதி (பார்க்கிங்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நகரப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக 30 அரசு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலி மருந்து வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள். எனவே அவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றார்.