புதுச்சேரி

கள்ளச்சாராயத்தை ஒழிக்க தவறிய ரங்கசாமியை பதவி நீக்கம் செய்ய முடியுமா? பாஜகவுக்கு நாராயணசாமி சவால்

Published On 2023-05-23 05:46 GMT   |   Update On 2023-05-23 07:25 GMT
  • ரங்கசாமி நிர்வாகத்தை நடத்துவதில் ஞானசூனியமாக செயல்படுவதால், அதிகாரிகள் நீட்டும் கோப்புகளில் ஏன் என்று கேட்காமல் கையெழுத்திட்டு வருகிறார்.
  • விஷ சாராயம் தயாரிக்க பயன்படுத்தும் மெத்தனால் புதுவையிலிருந்து சென்றுள்ளது.

புதுச்சேரி:

புதுவை மாநிலம் காரைக்காலில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

யூனியன் பிரதேசங்களின் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு ஆட்டிப்படைக்க வேண்டும் என்பதுதான் மோடி அரசின் வேலை. அதிகாரிகளை நிர்வகிக்கும் அதிகாரம் இல்லை என்றால் துணை நிலை ஆளுநர்களை மதிக்கமாட்டார்கள் என்பதால் புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செயல்படுகிறார்.

முதலமைச்சர் ரங்கசாமி நிர்வாகத்தை நடத்துவதில் ஞானசூனியமாக செயல்படுவதால், அதிகாரிகள் நீட்டும் கோப்புகளில் ஏன் என்று கேட்காமல் கையெழுத்திட்டு வருகிறார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் என டெல்லி சுப்ரீம்கோர்ட்டு அளித்த தீர்ப்பு புதுவை உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.

இதை செயல்படுத்த கவர்னர் தமிழிசை மறுக்கிறார். அவரின் பகல் கனவு பலிக்காது.

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கள்ளச்சாராய உயிரிழப்புக்கு பொறுப்பேற்று 2 தமிழக அமைச்சர்களை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என கவர்னரிடம் மனு கொடுத்துள்ளார்.

விஷ சாராயம் தயாரிக்க பயன்படுத்தும் மெத்தனால் புதுவையிலிருந்து சென்றுள்ளது. அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தவறிய புதுவை முதலமைச்சர் ரங்கசாமியை பதவிநீக்கம் செய்ய முடியுமா? பா.ஜனதாவினர் ஊருக்குத்தான் உபதேசம் செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News