அமெரிக்காவுக்கு 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை வெனிசுலா அனுப்பும் - டிரம்ப்
- வெனிசுலா எண்ணெய் அதன் சந்தை விலையில் விற்கப்படும்.
- அந்தப் பணம் வெனிசுலா மற்றும் அமெரிக்க மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும்.
வெனிசுலா மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்து அமெரிக்கா அழைத்து வந்தது.
வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.
இதற்கிடையே வெனிசுலா உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அந்நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார்.
இதற்கிடையே வெனி சுலா நாட்டை அமெரிக்கா நிர்வகிக்கும் என்றும் அந்நாட்டு எண்ணெய் வளத்தை கையாளுவோம் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். தங்களின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்சுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் வெனிசுலாவில் இருந்து 5 கோடி கச்சா எண்ணெய் பேரல்களை அமெரிக்கா வாங்கும் என்று டிரம்ப் அறிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வெனிசுலாவில் உள்ள இடைக்கால அதிகாரிகள் 30 மில்லியன் (3 கோடி) முதல் 50 மில்லியன் (5 கோடி) பேரல்கள் உயர்தர கச்சா எண்ணெயை அமெரிக்காவுக்கு வழங்கவுள்ளனர் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த எண்ணெய் அதன் சந்தை விலையில் விற்கப்படும். அந்தப் பணம் வெனிசுலா மற்றும் அமெரிக்க மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும். அந்த பணம் என்னால் கட்டுப்படுத்தப்படும். இந்தத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த எரிசக்தித் துறைச் செயலாளர் கிறிஸ் ரைட்டுக்கு உத்தரவிட்டு உள்ளேன். இந்த எண்ணெய் வெனிசுலா சேமிப்பு கப்பல்கள் மூலம் எடுத்து வரப்பட்டு அமெரிக்கா கப்பல்துறைக்கு நேரடியாக இறக்குமதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
வெனிசுலாவில் உள்ள எண்ணெய் வளத்தை கைப்பற்ற டிரம்ப் நினைக்கிறார் என்றும் இதனால் தனது ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கிறார் என்றும் நிக்கோலஸ் மதுரோ குற்றம் சாட்டியிருந்தார். தற்போது அவர் கைது செய்யப் பட்டுள்ள நிலையில் வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.