பொருளாதார ஏற்றத்தாழ்வின் பிடியில் உலகம்.. பணக்காரர்கள் சொத்துமதிப்பு பன்மடங்கு உயர்வு - Oxfam அறிக்கை
- பணக்காரர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டங்களையும் பொருளாதாரக் கொள்கைகளையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்கிறார்கள்.
- உலகின் பாதி ஏழைப் மக்களின் மொத்த சொத்து மதிப்புக்குச் சமமான வளர்ச்சியை, கோடீஸ்வரர்கள் ஒரே ஆண்டில் ஈட்டியுள்ளனர்.
உலக அளவில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறித்து Oxfam இன்டர்நேஷனல் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டில் மட்டும் உலகக் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 16 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020 இல் இருந்து 80 சதவீதம் அதிகரித்துள்ளது.
தற்போது அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 18.3 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.1,660 லட்சம் கோடி ) என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அதாவது, உலகின் பாதி ஏழைப் மக்களின் மொத்த சொத்து மதிப்புக்குச் சமமான வளர்ச்சியை, கோடீஸ்வரர்கள் ஒரே ஆண்டில் ஈட்டியுள்ளனர்.
அறிக்கைப்படி, ஒரு சாதாரண குடிமகனை விட, ஒரு கோடீஸ்வரர் அரசியல் பதவிகளைப் பெறுவதற்கு 4,000 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது.
பணக்காரர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டங்களையும் பொருளாதாரக் கொள்கைகளையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்கிறார்கள் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும் அந்த அறிக்கையில், ஒருபுறம் பணக்காரர்களின் சொத்து உயரும் நிலையில், மறுபுறம் உலகில் உள்ளவர்களில் நான்கு பேரில் ஒருவருக்குச் சரியான உணவு கிடைப்பதில்லை. உலக மக்கள் தொகையில் பாதி பேர் வறுமையில் வாடுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் பணக்காரர்களுக்குச் சாதகமாக வரிகளைக் குறைத்தது மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது போன்ற செயல்பாடுகள், கோடீஸ்வரர்களின் சொத்து உயர முக்கியக் காரணமாக இருந்ததாக ஆக்ஸ்பாம் சாடியுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை மற்றும் முன்னணி சமூக வலைதளங்கள் அனைத்தும் கோடீஸ்வரர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன என்று அறிக்கை கூறுகிறது.
பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகமாக உள்ள நாடுகளில், ஜனநாயகம் சீர்குலைய 7 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளதாக அறிக்கை எச்சரிக்கிறது.
இவற்றுக்கு தீர்வாக பணக்காரர்கள் மீது அதிக வரி, அரசியலில் பணத்தின் ஆதிக்கம் குறைப்பு, சாதாரண மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வலுவான சட்டங்கள் வேண்டும் என்று Oxfam அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
அதேநேரம் இந்தியாவின் இடஒதுக்கீடு முறை அதிகாரத்தை ஜனநாயகப்படுத்தும் ஒரு சிறந்த வழி எனவும் Oxfam தனது அறிக்கையில் பாராட்டி உள்ளது.