#IranIsraelWar 7வது நாளாக நீடிக்கும் போர்: 30 ஈரான் போர்க் கப்பல்கள் அழிப்பு- அமெரிக்கா தகவல்
- ஈரானின் இஸ்பஹான் உள்பட பல்வேறு நகரங்கள் மீதும் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டன.
- இன்று ஈரானிய டிரோன் விமானம் தாங்கி கப்பலை தாக்கினோம்.
அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் இன்று 7-வது நாளாக நீடித்து வருகிறது. இதில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் தொடர்ந்து ஏவுகணை-குண்டுகளை வீசின.
தலைநகர் தெக்ரானில் ராணுவம் மற்றும் அரசு தொடர்பான கட்டமைப்புகளை இலக்காக வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதனால் தெக்ரான் முழுவதும் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டு கொண்டிருந்தன.
இன்று காலை தெக்ரானில் ஜோம்ஹுரி அவென்யூவில் உள்ள மார்க்கெட்டில் குண்டு வீசப்பட்டது. இதில் குடியிருப்பு பகுதிகள் கடும் சேதமடைந்தன. தாக்குதல்களைத் தொடர்ந்து மத்திய மற்றும் கிழக்கு தெக்ரானில் உள்ள வீதிகள் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்பட்டன.
அதேபோல் ஈரானின் இஸ்பஹான் உள்பட பல்வேறு நகரங்கள் மீதும் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் ஈரானின் ஐரிஸ் ஷாஹித் பகேரி போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில் அந்த கப்பல் தீப்பிடித்து எரிந்தது. டிரோன் விமானம் தாங்கி கப்பலான ஐரிஸ் ஷாஹித் பகேரி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வீடியோவை அமெரிக்க ராணுவம் வெளியிட்டு உள்ளது.
முழு ஈரானிய கடற்படையையும் மூழ்கடிக்கும் பணியில் அமெரிக்கப் படைகள் பின்வாங்க போவதில்லை என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க உயர் ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது,"தற்போது நடந்து வரும் போரில் 30-க்கும் மேற்பட்ட ஈரான் கப்பல்களை அமெரிக்கா மூழ்கடித்துள்ளது. இன்று ஈரானிய டிரோன் விமானம் தாங்கி கப்பலை தாக்கினோம்.
இது 2-ம் உலகப்போரின் விமானம் தாங்கி கப்பலின் அளவு ஆகும். ஈரான் படைகளின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் கணிசமாகக் குறைந்துவிட்டன" என்றார்.
இதற்கிடையே இஸ்ரேலின் ராணுவ தளபதி கூறும் போது," 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதங்களுடன் 2,500 தாக்குதல்களை நடத்திய பிறகு ஈரானுடனான போரில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து உள்ளோம்" என்றார்.
இஸ்ரேல் மீது ஈரான் நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை சரமாரியாக ஏவுகணைகளை வீசியது. அதை தடுக்க இஸ்ரேல் வான்பாதுகாப்பு அமைப்பு தீவிரமாக செயல்பட்டது. இருந்தபோதிலும் இஸ்ரேலுக்குள் சில ஏவுகணைகள் விழுந்து வெடித்தன. இதனால் இஸ்ரேல் முழுவதும் தாக்குதலுக்கான அபாய ஒலிகள் எழுப்பப்பட்டன.
அதேபோல் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. பக்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ள ஒரு ஓட்டல் மற்றும் 2 குடியிருப்பு கட்டிடங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதில் அந்த கட்டிடங்கள் சேதமடைந்தன. மேலும் பக்ரைனில் உள்ள இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது டிரோன், ஏவுகணைகள் வீசப்பட்டன. அங்கு அமெரிக்க ராணுவம் பயன்படுத்தும் அலி அல்-சலேம் விமான தளம் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளது.
கத்தாரில் அமெரிக்க ராணுவ தளமான அல் உதெய்த் விமான தளத்தை குறிவைத்து நடத் தப்பட்ட டிரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரானுக்கு ஆதரவாக உள்ள லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்து வருகிறது. இதில் தெற்கு பெய்ரூட்டில் சரமாரியாக ஏவுகணைகள் வீசப்படுகின்றன. பதிலுக்கு ஹிஸ்புல்லாவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
எல்லையில் உள்ள இஸ்ரேலிய நிலைகள் மீது ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசிய தாக ஹிஸ்புல்லா தெரிவித்து உள்ளது. இதற்கிடையே எல்லையில் இருந்து 5 கி.மீ தொலைவு வரை வசிக்கும் இஸ்ரேலியர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று ஹிஸ்புல்லா இயக் கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.