லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைன் வந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் இர்பின் நகரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். பின்னர் பேசிய பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இர்பின் நகரில் படுகொலைகள் மற்றும் போர்க்குற்றங்கள் நடந்திருப்பதாக கூறினார். ரஷியாவின் படையெடுப்பை எதிர்கொள்ளும் உக்ரைனின் வீரத்தையும் அவர் பாராட்டினார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜெர்மன் அதிபர் ஓலாப் ஷோல்ஸ் மற்றும் இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி ஆகியோர் இன்று உக்ரைன் வந்தடைந்தனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச உள்ளனர்.
உக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்புக்கு ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து ரஷியா உலக வணிக அமைப்பு, உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட சில அமைப்புகளில் இருந்து வெளியேறப்போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் உலக வணிக அமைப்பில் இருந்து ரஷியா வெளியேறாது என அந்நாட்டு அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 4 மாதங்களை எட்டியுள்ளது. ரஷியாவை எதிர்க்கும் வகையில் உக்ரைனுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்கா, தங்களை தொடர்புகொள்ளவே இல்லை என ரஷியா தெரிவித்துள்ளது. இருப்பினும் எதிர்க்கால தேவையை கருதி அமெரிக்கா தங்களுடன் சுமூக உறவை மேற்கொள்ளும் எனவும் கூறியுள்ளது.
உக்ரைன், மால்டோவா, ஜார்ஜியா போன்ற அண்டை நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது மட்டும் தீர்வாக இருக்க முடியாது என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறியுள்ளார். மால்டோவா தலைநகரில் அந்நாட்டு அதிபர் மியா சாண்டுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய அவர், பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், பாதுகாப்பு போன்ற முக்கிய பிரச்சினைகளில் ஒத்துழைக்க ஒரு பரந்த ஐரோப்பிய அரசியல் சமூகத்தை உருவாக்குவது முக்கியம் என்று தெரிவித்துள்ளார். உக்ரைன், மால்டோவா மற்றும் ஜார்ஜியாவின் மனுக்கள் குறித்து விவாதிக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஜூன் மாத இறுதியில் பிரஸ்ஸல்ஸில் கூடுவார்கள் என்றும் இதில் ஒருமித்த கருத்தை உருவாக்குவதே தமது பணி என்றும் மேக்ரான் குறிப்பிட்டார்.
ரஷியாவுடனான போரில் எதிர்த்து போரிடும் வகையில் உக்ரைனுக்கு கூடுதல் பாதுகாப்பு உதவிகளை அமெரிக்கா வழங்கி உள்ளது. அதன்படி ஒரு பில்லியன் டாலர் மதிப்பில் கூடுதலாக ஹோவிட்சர்கள், வெடிமருந்துகள், கடலோர பாதுகாப்பு அமைப்புகள், பீரங்கிகளுக்கான உதிரி பாகங்கள், ஆர்ட்டிலரி ராக்கெட் சிஸ்டம்ஸ் உள்ளிட்டவற்றை வழங்கி உள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா இப்போதுவரை உக்ரைனுக்கு சுமார் 6.3 பில்லியன் டாலர் பாதுகாப்பு உதவியை வழங்கியுள்ளதாக பென்டகன் செய்தித் தொடர்பாளர் டாட் ப்ரீசீல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கான அமெரிக்கத் தூதர் பிரிட்ஜெட் பிரிங்க், உக்ரைன் அரசின் இணையப் பாதுகாப்பு நிறுவனத்திற்குச் சென்று ரஷிய ஹேக்கர்களின் அச்சுறுத்தல்களுக்கு எதிரான பணிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார். உக்ரைன் உடன் சிறப்புத் தொடர்பு மற்றும் தகவல் பாதுகாப்பு சேவைக்காக, அமெரிக்க உயர்மட்ட தூதரக அதிகாரியாக பிரிங்க் நியமிக்கப்பட்ட நிலையில், அவர் இந்த சந்திப்பில் பங்கேற்றார். உக்ரைன் மீது ரஷியாவின் படையெடுப்புக்கு பிறகு, உக்ரைன் அரசு நிறுவனங்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு ஆபரேட்டர்களுடன் அமெரிக்க தொழில்நுட்ப நிபுணர்களை இணைப்பது தொடர்பான திட்டதில் அமெரிக்க தகவல் பாதுகாப்பு சேவை நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.
உக்ரைன் ராணுவத்தில் இணைந்து கார்கிவ் பகுதி போரில் பங்கேற்று வந்த இரண்டு அமெரிக்கர்கள் கடந்த ஒரு வாரமாக காணாவில்லை என புகார் எழுந்துள்ளது. அவர்கள் ரஷியப் படைகளின் பிடியில் சிக்கியிருக்கலாம் என்று குடும்பத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர். அலெக்சாண்டர் ஜான்-ராபர்ட் ட்ரூக், மற்றும் ஆண்டி தை என்கோக் ஹுய்ன் ஆகியோர் ஜூன் 9ந்தேதி இஸ்பிட்ஸ்கே நகருக்கு அருகில் உக்ரைன் படைப்பிரிவின் கட்டளையின் கீழ் போரில் பங்கேற்றதாக சிஎன்என் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருவரின் பாஸ்போர்ட்டுகளின் புகைப்படங்கள் மற்றும் உக்ரைனுக்குள் அவர்கள் நுழைந்த முத்திரைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியாவுடன் உக்ரைன் ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறி உள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மால்டோவா உள்பட நேட்டோவின் தெற்குப் பகுதியில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் மேக்ரான். நேற்று ருமேனியா சென்றடைந்த மேக்ரான், நாளை ஜெர்மன் அதிபர் மற்றும் இத்தாலி பிரதமர் ஆகியோருடன் உக்ரைனின் கீவ் நகருக்குச் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷியாவுக்கு எதிரான போரில் மேக்ரான் உக்ரைனுக்கான தனது ஆதரவை தெளிவாக கூறவில்லை என, உக்ரைன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நட்பு நாடுகள் மேக்ரானை விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
ரஷிய படையெடுப்பு காரணமாக உக்ரைனில் சுமார் 24 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குளிர்காலப் பயிர்களை அறுவடை செய்யமுடியாத நிலையில் இருப்பதாக உக்ரைன் வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பயிர்களின் மொத்த மதிப்பு 1.435 பில்லியன் டாலர் ஆகும்.
ரஷிய படையெடுப்பின் காரணமாக உக்ரைன் வேளாண் துறை இதுவரை 4.292 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 42,000 ஆடுகள், 92,000 பசுக்கள், 2,58,000 பன்றிகள் மற்றும் 57 லட்சத்திற்கும் அதிகமான பறவைகள் கொல்லப்பட்டதாக வேளாண் அமைச்சகம் கூறியிருக்கிறது.