உலகம்

லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

Published On 2022-06-05 17:08 IST   |   Update On 2022-06-23 06:11:00 IST
2022-06-19 11:34 GMT

மேற்கத்திய நாடுகளின் விண்வெளித் துறை, போரை நோக்கிச் செல்வதாக ரஷிய அரசு விண்வெளிக் கழக தலைமை இயக்குனர் டிமிட்ரி ரோகோசின் எச்சரித்துள்ளார்.

2022-06-19 00:34 GMT

உக்ரைன் ரஷியா போர் குறித்து தன் கேமராவில் பதிவான காட்சிகளை உக்ரைன் பெண் டாக்டர் டைரா மரியுபோல் நகரில் இருந்த சர்வதேச பத்திரிகையாளர் குழுவுக்கு அனுப்பினார். அந்த வீடியோக்களுடன் பத்திரிகையாளர் ஒருவர் உக்ரைனிலிருந்து தப்பிச் சென்றார். அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் அவர் வெளியிட அவை வேகமாக பரவின. அந்த வீடியோக்களில் உக்ரைன் மக்களிடம் ரஷிய ராணுவம் மனிதநேயமற்ற முறையில் நடந்துகொள்ளும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதனால் ஆத்திரமடைந்த ரஷிய படைகள் மரியுபோலில் இருந்த டாக்டர் டைராவை மார்ச் மாதம் கைதுசெய்தது. அவரை விடுவிக்க உக்ரைன் அரசும், டைராவின் குடும்பத்தினரும் பேச்சு நடத்தியதால் 3 மாதத்துக்கு பின் டாக்டர் டைராவை ரஷிய படைகள் விடுவித்தன.

2022-06-18 21:15 GMT

ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனின் லூகன்ஸ் மாகாணத்தில் உள்ள செவ்ரொடோன்ஸ்க் நகரில் உச்சபட்ச சண்டை நீடித்து வருகிறது. அங்கு சண்டையிட ரஷியா அதிகளவில் ரிசர்வ் படைகளை அனுப்பி வைத்துள்ளது.

2022-06-18 16:14 GMT

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தெற்கு போர்முனையில் உள்ள அந்நாட்டு ராணுவ வீரர்களை சந்தித்தார். நிலத்திற்கு அடியில் உள்ள தங்குமிடம் ஒன்றில் இருந்த அந்த வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கிய அவர், அவர்களுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டார். எங்கள் வீரர்களின் துணிச்சலானவர்கள் என்றும் அனைவரும் நாட்டிற்காக பணியாற்றுகிறார்கள் என்றும் கூறினார். இந்த போரில் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றும் தமது டெலிகிராம் தகவலில் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார்.

2022-06-18 16:09 GMT

டோனெட்ஸ்க் பிராந்திய பகுதியில் உள்ள ஜஸ்யாட்கோ நிலக்கரி சுரங்கத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டபோது தொழிலாளர்கள் அதில் சிக்கிக் கொண்டனர். ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த பிரதேசத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், எழுபத்தேழு சுரங்கத் தொழிலாளர்கள் இன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும், யாரும் காயம் அடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-06-18 09:39 GMT

ரஷிய எரிவாயு உற்பத்தி நிறுவனமான காஸ்ப்ரோம், உக்ரைனின் வழியாக ஐரோப்பாவிற்கு சப்ளை செய்யும் எரிவாயுவின் அளவு, வெள்ளிக்கிழமை 41.9 மில்லியன் கன மீட்டராக இருந்தது. அது சனிக்கிழமை 41.4 மில்லியன் கன மீட்டராக குறைந்துள்ளது. சத்ஜா நுழைவாயில் வழியாக அனுப்பப்படும் எரிவாயுவின் அளவு இது. மற்றொரு முக்கிய நுழைவு பாதையான சோக்ரானோவ்கா வழியாக எரிவாயு வழங்குவதற்கான விண்ணப்பத்தை உக்ரைன் நிராகரித்துவிட்டதாக காஸ்ப்ரோம் கூறி உள்ளது.

2022-06-18 09:26 GMT

கிழக்கு உக்ரைனின் டோனெட்ஸ்க் பகுதியில் உள்ள ஜஸ்யாட்கோ நிலக்கரிச் சுரங்கத்தில் ஷெல் குண்டுகள் வீசி தாக்கியதையடுத்து, 77 சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டதாக ரஷியாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் படைகள் ஷெல் தாக்குதல் நடத்தியதால் சுரங்கத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது, 77 சுரங்கத் தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் உள்ளனர் என்று ரஷிய ஆதரவு பிரிவினைவாத பிராந்திய பாதுகாப்பு படை தகவலை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

2022-06-18 00:34 GMT

ஜெர்மனி பிரதமர் ஒலப் ஸ்கோல்ஸ் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் உக்ரைன் போர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஸ்கோல்ஸ், உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவர தலைவர்கள் ரஷிய அதிபர் புதினுடன் நேரடியாக பேசுவது அவசியமாகும். பிரான்ஸ் அதிபர் போரை நிறுத்துவது குறித்து புதினுடன் பேசுகிறார். நானும் புதினுடன் தொடர்ந்து பேசி வருகிறேன் என தெரிவித்தார்.

2022-06-17 20:30 GMT

இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மற்றும் பணக்கார பிரமுகர்கள் ரஷியாவில் இருந்து வெளியேற கூடிய சூழலால், அந்நாட்டின் பொருளாதாரத்தின் மீது போரால் ஏற்படும் நீண்டகால சேதம் இன்னும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது. ரஷியாவில் இருந்து வெளியேறுவதற்கான விண்ணப்பங்களில் இருந்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் முன்பே அந்நாட்டில் இருந்து கிளம்ப முயற்சித்து உள்ளனர் என தெரிய வந்துள்ளது என இங்கிலாந்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2022-06-17 15:47 GMT

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், உக்ரைன் சென்று, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். தலைநகர் கீவ்வில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஜெலன்ஸ்கியுடன் இருக்கும் புகைப்படத்தை தமது டுவிட்டர் பதிவில் ஜான்சன் பகிர்ந்துள்ளார்.

ரஷியா போர் தொடுத்த பிறகு இங்கிலாந்து பிரதமர், இரண்டாவது முறையாக உக்ரைன் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உக்ரைனின் ஆயுதப் படைகளுக்கு ஒரு பெரிய பயிற்சி நடவடிக்கையைத் தொடங்க, இங்கிலாந்து முன்வந்துள்ளதாக இங்கிலாந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Similar News