உலகம்

லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

Published On 2022-06-05 17:08 IST   |   Update On 2022-06-23 06:11:00 IST
2022-06-17 12:19 GMT

உக்ரைனின் தெற்கு நகரமான மைகோலெய்வ் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். ஒரு குழந்தை உட்பட 20 பேர் காயமடைந்தனர் என்று பிராந்தியத்தின் ஆளுநர் கூறினார். 4 குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்ததாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

2022-06-17 12:17 GMT

ஐரோப்பிய ஒன்றியத்தின் வேட்பாளர் நாடாக உக்ரைனுக்கு அதிகாரபூர்வ அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இது போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாடு, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாகும் நீண்ட பாதையின் முதல் படியாகும். அடுத்த வாரம் பிரஸ்ஸல்ஸில் நடைபெறும் உச்சிமாநாட்டின் போது, இந்த பரிந்துரை குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர். 

2022-06-17 12:10 GMT

ஐரோப்பிய நாடுகளுக்கான இயற்கை எரிவாயு ஏற்றுமதியை ரஷியா நிறுத்தி உள்ளது. ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி செய்து வரும் நிலையில், இத்தாலி மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு, பாதி அளவும், பிரான்ஸ் நாட்டிற்கு முழுவதுமாக இயற்கை எரிவாயு ஏற்றுமதி ரத்துச் செய்யப்படுவதாக ரஷியா தெரிவித்துள்ளது- முன்னதாக போலந்து, பல்கேரியா, பின்லாந்து, நெதர்லாந்து மற்றும் டென்மார்க் நாடுகளுக்கு இயற்கை எரிவாயு ஏற்றுமதியை ரஷியா குறைத்திருந்தது.

2022-06-17 11:46 GMT

போர் தொடங்கி நான்கு மாதங்கள் ஆன நிலையில், உக்ரைன் முழுவதும், குறிப்பாக கிழக்கு டான்பாசில் மனிதாபிமான நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாக ஐ.நா. மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது.

2022-06-17 11:44 GMT

உக்ரைன் ஏவுகணைகள் ரஷிய கடற்படையின் இழுவை கப்பலை தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜிமின்யி தீவுக்கு வீரர்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை ஏற்றிச் சென்றபோது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒடேசா பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.

2022-06-17 07:26 GMT

ரஷியா உக்ரைனுடனான போரில் பெரும் இழப்புகளை சந்தித்ததுடன், ஏற்கனவே மூலோபாய ரீதியாக தோற்றுவிட்டதாகவும், நேட்டோவை வலுப்படுத்துவதாகவும் பிரிட்டன் ஆயுதப்படைகளின் தலைவர் கூறி உள்ளார். 

2022-06-17 07:21 GMT

ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்துவதால் உக்ரைனுக்கு ஐரோப்பா தனது ஆதரவை அதிகரிக்கிறது. உக்ரைனில் முக்கிய உள்கட்டமைப்பை மீண்டும் கட்டமைப்பது தொடர்பாக பிரிட்டன் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. 

2022-06-16 23:15 GMT

உக்ரைனின் கெர்சன் ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக உள்ளது. கிரிமியன் தீபகற்பத்தின் வடக்கே அமைந்துள்ள கெர்சன், ரஷிய கட்டுப்பாட்டின் கீழ் வந்த உக்ரைனின் முதல் பிராந்தியம் ஆகும். இந்நிலையில் அங்கு பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கும், தற்போது அங்கு வசிக்கும் அனைத்து ஆதரவற்றவர்களுக்கும் ரஷிய குடியுரிமை வழங்கப்படுகிறது. கெர்சனில் வசிக்கும் 23 குடியிருப்பாளர்கள் ரஷிய பாஸ்போர்ட்டைப் பெற்றுள்ளனர் என ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

2022-06-16 20:09 GMT

போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 32,950 ரஷிய வீரர்கள் பலியாகியுள்ளதாக உக்ரைன் ராணுவ ஜெனரல் தெரிவித்துள்ளார். மேலும் 1,449 ஆயுதப் போர் டாங்கிகள், 3,545 போர் கவச வாகனங்கள், 729 பீரங்கி அமைப்புகள், 97 வான் பாதுகாப்பு அமைப்புகள், 213 போர் விமானங்கள், 179 ஹெலிகாப்டர்கள், 129 கப்பல் ஏவுகணைகள், 13 போர்க்கப்பல்கள் உள்ளிட்ட ரஷிய தரப்பு இழப்புகளின் பட்டியலையும் உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ளது.

2022-06-16 14:58 GMT

பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் உக்ரைன் வந்துள்ளனர். அவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் உறுப்பினராக சேருவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தலைவர்கள் தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வதாக பிரான்ஸ் அதிபர் தெரிவித்தார். 

Similar News