உலகம்

லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

Published On 2022-06-05 17:08 IST   |   Update On 2022-06-23 06:11:00 IST
2022-06-10 06:39 GMT

உக்ரைனுக்கு கூடுதலாக 205 மில்லியன் யூரோ நிதி உதவி வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

2022-06-09 23:23 GMT

உக்ரைனின் கிரிவி ரிஹ் நகரில் ரஷிய படைகள் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வருவதாக டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்திய ராணுவ நிர்வாக தலைவர் ரெஸ்னிச்சென்கோ தெரிவித்துள்ளார். இதில் ஆறு பேர் உயிரிழ்ந்தனர். 179 வீடுகள், இரண்டு பள்ளிகள், ஒரு மழலையர் பள்ளி மற்றும் ஒரு மருத்துவமனை ஆகியவை சேதமடைந்தன என்று அவர் கூறினார். அந்த பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஏவுகணைத் தாக்குதலால் எரிவாயு, மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகத்தில் சிக்கில் நீடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், கார்கிவ் நகரில், ரஷிய படைகள் நடத்திய தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

2022-06-09 23:14 GMT

உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷியா தாக்குதல் நடத்துவதை தடுக்கும் வகையில், உக்ரைன் படைகள், கீவ் நகரைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷியா படையெடுத்து100 நாட்களுக்கு மேலாகியும் தலைநகர் கீவ்விற்கு உடனடி ஆபத்து எதுவும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். எனினும் நாளை எதுவும் மாறும் சூழலை நாங்கள் புரிந்து கொள்கிறோம் என்றும், கீவ் மற்றும் நகரை சுற்றி உள்ள உக்ரைன் படையினருக்கு தற்காப்பு உள்ளிட்ட தீவிர பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2022-06-09 23:13 GMT

ரஷிய அதிபர் புதின் உள்பட அந்நாட்டின் பிற முக்கிய தலைவர்கள் மீது உக்ரைன் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சின் வெளியிட்ட தடை உத்தரவில் அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் ரஷிய அதிபர், ரஷ்ய பிரதமர், ரஷிய வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், துணைப் பிரதமர்கள், அமைச்சர்கள் மற்றும் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் உள்பட பிற அதிகாரிகள் மீது காலவரையின்றி பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுகிறது. உக்ரைனில் உள்ள அவர்களது சொத்துக்களுக்கு தடை, ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகளுக்குத் தடை, உக்ரைனிலிருந்து மூலதனத்தை திரும்பப் பெறுவதைத் தடுப்பது ஆகியவை இந்த உத்தரவில் இடம் பெற்றுள்ளன. இது குறித்த ஆணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து இந்த தடை உத்தரவு நடைமுறைக்கு வருகிறது.

2022-06-09 23:02 GMT

உக்ரைன் உடனான ரஷிய போரை, ஸ்வீடனுக்கு எதிரான போருடன் ஒப்பிட்டு ரஷிய அதிபர் புதின் பேசியுள்ளார். மாஸ்கோவில் இளம் தொழில்முனைவோர் மத்தியில் உரையாடிய அவர், 18 ஆம் நூற்றாண்டில் ஸ்வீடனுக்கு எதிராக ரஷியா நடத்திய போரின் போது பால்டிக் கடற்கரையை ரஷியா கைப்பற்றியதை நினைவு கூர்ந்தார். எனினும் அந்த பிரதேசத்தை ரஷியாவிற்கு சொந்தமானது என்று ஐரோப்பாவில் உள்ள எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை என புதின் தெரிவித்தார்.உக்ரைன் உடனான போரில் ரஷிய ராணுவம் தனது வலிமையை மீட்டெடுத்து முன்னேற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2022-06-09 10:38 GMT

ரஷிய படைகள் தாக்குதல் நடத்தும் முக்கிய மையமாக செவரோடோனெட்ஸ்க் நகரம் உள்ளது. பெரும்பாலான பகுதிகள் ரஷியா வசம் வந்துள்ளன. எனினும், தொழில்துறை மண்டலம் மற்றும் செவரோடோனெட்ஸ்க் நகரின் அருகிலுள்ள பகுதிகளை உக்ரைன் படைகள் இன்னும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. தற்போதுள்ள நிலைமை கடினமானது என்றாலும் சமாளிக்கக்கூடியது என்று நகர மேயர் கூறி உள்ளார். ரஷியாவின் தீவிர பீரங்கித் தாக்குதல்களுக்கு மத்தியில் செவரோடோனெட்ஸ்க் நகரில் பரிதவிக்கும் 10000 மக்களை வெளியேற்றுவது சாத்தியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

2022-06-09 10:27 GMT

மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்டுள்ள நீண்ட தூர பீரங்கிகள், செவெரோடோனெட்ஸ்க் நகரில் ரஷிய படைகளை தோற்கடிக்க உதவியாக இருக்கும் என்று உக்ரைன் அதிகாரி ஒருவர் நம்பிக்கை தெரிவித்தார். ரஷிய பீரங்கிகளுடன் சண்டையிடுவதற்கு, நீண்ட தூர இலக்குகளை தாக்கும் பீரங்கிகள் கிடைத்தவுடன், எங்கள் சிறப்புப் படைகள் இரண்டு முதல் மூன்று நாட்களில் சண்டையை முடிவுக்கு கொண்டு வந்துவிடும் என்று லுகான்ஸ்க் பிராந்திய கவர்னர் செர்ஜி கெய்டே கூறியிருக்கிறார்.

2022-06-09 09:37 GMT

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதார தடையை விதித்துள்ளன. ரஷியாவில் இயங்கி வந்த மேற்கத்திய நிறுவனங்கள் அந்நாட்டை விட்டு வெளியேறின. இந்நிலையில் இந்த நடவடிக்கைகளால் ரஷியாவின் 3 வருட பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என சர்வதேச நிதி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் ரஷியாவின் இந்த ஆண்டு பொருளாதாரம் 15 சதவீதம் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-06-09 06:05 GMT

உக்ரைன் மீதான ரஷிய போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், ரஷியா பலம் வாய்ந்ததாக உணருவதால்தான் போர் நிறுத்த முடிவுக்கு வர மறுக்கிறது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ‘ரஷியாவை உலக பொருளாதார இயக்கத்தில் இருந்து தள்ளிவைத்து பலவீனப்படுத்தினால்தான் அந்நாடு போர் நிறுத்தத்திற்கு உடன்படும்’ என கூறினார்.

2022-06-08 23:39 GMT

உக்ரைன்மீது ரஷியா போர் தொடுத்ததன் காரணமாக ஸ்பெயின் நாட்டில் பணவீக்கம், நிதி பற்றாக்குறை மற்றும் மூலப்பொருட்கள் விநியோக பற்றாக்குறை ஆகியவற்றால் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துவருகிறது. கோடைக்காலம் தொடங்கிய நிலையில் அங்கு மின் நுகர்வு உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மின் கட்டணங்கள் அதிகரித்து, மக்களின் நிதிச்சுமை கூடும் என கூறப்படுகிறது. எரிசக்தி விலையேற்றத்தால் ஏற்கனவே அந்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Similar News