லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பத்திரிகை ஒன்றின் இணையவழி மாநாட்டில் பங்கேற்றார். நம் ஒட்டுமொத்த தேசத்தின் மீதான ரஷியாவின் கட்டுப்பாட்டை முறியடித்து, மீண்டும் நாம் கட்டுப்பாட்டைப் பெறவேண்டும். நாங்கள் யாரையும் அவமானப்படுத்தப் போவதில்லை. நாங்கள் பதிலடி கொடுப்போம். சீவிரோடோனெட்ஸ்க், லைசிசான்ஸ்க், போபாஸ்னா ஆகியவை மிகவும் கடினமான இடங்களாக இருக்கின்றன என தெரிவித்தார்.
போர் குற்றம் தொடர்பாக ரஷிய வீரர்களுக்கு ஏற்கனவே 3 வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 8 போர்க்குற்ற வழக்குகள் உக்ரைன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, உக்ரைன் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா அந்நாட்டின் மரியுபோல் நகரை கடந்த மாதம் கைப்பற்றியது. இதையடுத்து உக்ரைன் வீரர்கள் அங்கிருந்த உருக்கு ஆலையில் தஞ்சம் அடைந்த நிலையில், அவர்கள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் அதில் கொல்லப்பட்ட 210 உக்ரைன் வீரர்களின் உடல்களை ரஷியா, உக்ரைனிடம் ஓப்படைத்தது. மேலும் பல உடல்கள் உருக்கு ஆலையில் கிடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு உக்ரைனின் செவிரோடொனெட்ஸ்க், லிசிசான்ஸ்க் நகரங்கள் ரஷிய படைகளின் மூர்க்கத்தனமான தாக்குதல்களால் அழிக்கப்பட்டுள்ளன. அந்த நகரங்கள் செத்த நகரங்களாகி விட்டன என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு நகரமான ஜபோரிஜியா நகரையும் கைப்பற்ற ரஷிய படைகள் குறிவைத்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதுதான் தொழில்துறை பிராந்தியமான டான்பாஸ் பிராந்தியத்தினை பிடிப்பதற்கு திறவுகோல்போல அமையும். இந்த நகரில் 7 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இங்கு அச்சுறுத்தும் சூழல் நிலவுகிறது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
ரஷியா, உக்ரைன் இடையிலான போர் காரணமாக சர்வதேச அளவில் உரங்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக இறக்குமதி உரங்களை அதிகம் சார்ந்திருக்கும் மெக்சிகோ நாட்டில் விவசாயிகள் தற்போது அதிக விலை கொடுத்து உரங்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது அவர்களின் வருமானத்தை வெகுவாகக் குறைத்துள்ளது. கொரோனா பாதிப்பு, தீவிரமான வானிலை, உரங்கள் தட்டுப்பாடு ஆகியவற்றால் மெக்சிகோவில் தற்போது உணவு பொருட்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய படைத்தளபதி குடுஜோவ் என்பவர் இறந்துள்ளதாக உக்ரைனில் உள்ள ரஷிய ஆதரவு படைகள் உறுதி செய்துள்ளன. ஏற்கனவே இவர் இறந்துவிட்டதாக ரஷிய தேசிய தொலைக்காட்சி செய்திவெளியிட்ட நிலையில், அதிகாரிகள் யாரும் இதை உறுதி செய்யாமல் இருந்தனர்.
உக்ரைனுக்கு எதிரான ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. மேலும் தங்கள் நாட்டில் உள்ள ரஷிய சொத்துக்களை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஜப்பானும் ரஷியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 2 ரஷிய வங்கிகள், 1 பெலாரஸ் வங்கியின் சொத்துக்களை முடக்கப்போவதாக அறிவித்துள்ளது.
கிழக்கு உக்ரைன் துறைமுக நகரான மாரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்கு ஆலையில் தற்போது 2,500க்கும் மேற்பட்டோர் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷிய படைகளின் திட்டங்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன என்றும், சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் பொதுக் கைதிகள் என்பதால், உலக சமூகத்தால் கண்காணிக்கப்படுவதாகவும், ஜெலன்ஸ்கி கூறினார். கிழக்கு உக்ரைனின் நிலைமை கடினமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் தானிய சேமிப்பு மையம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்திற்காக, ஐரோப்பிய ஒன்றிய அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் தெற்கு துறைமுக நகரமான மைகோலாய்வில் உள்ள பெரிய தானிய சேமிப்பு மையத்தில் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியதை ஐரோப்பிய ஒன்றிய உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் கண்டித்துள்ளார்.
உலகளாவிய உணவு நெருக்கடிக்கு தீர்வு அளிக்கும் இரண்டாவது பெரிய தானிய முனையத்தை ரஷ்யப் படைகள் அழித்துள்ளன என்று பொரெல் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்தார். உக்ரைன் துறைமுகங்களில் இருந்து கருங்கடல் வழியாக தானியங்களை ஏற்றிக் செல்லும் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு பாதுகாப்பான பாதையை வழங்குவதாக புதின் அளித்த உறுதி மொழிகளுக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் 61 அதிகாரிகள் மீது ரஷியா தனிப்படை தடைகளை விதித்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க நிதிச் செயலாளர் ஜேனட் யெல்லன், எரிசக்தித்துறை செயலாளர் ஜெனிபர் கிரான்ஹோம் , பாதுகாப்பு மற்றும் ஊடகப்பிரிவு நிர்வாகிகள் உட்பட 61 அமெரிக்க அதிகாரிகள் மீது தனிப்படைத் தடைகள் விதிக்கப் பட்டுள்ளதாகவும், ரஷியாவின் உள்நாட்டு வணிகப் பிரதிநிதிகளுக்கு எதிரான அமெரிக்கத் தடைகளுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.