இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
இஸ்ரேலுடனான தாக்குதலின்போது பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர் ஹமாஸ் பயங்கரவாதிகள். பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தி இருந்த நிலையில், மேலும் 2 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர்.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் விவகாரம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான் மன்னர் அப்துல்லாவுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, காசாவில் மக்களின் பாதுகாப்பு, மனிதாபிமான சூழ்நிலையை தீர்க்க ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை என வலியுறுத்தினார்.
காசா எல்லை அருகில் அமைந்திருக்கும் இஸ்ரேல் ராணுவ நிலைகள் மீது ஹமாஸ் நடத்திய டிரோன் தாக்குதலை முறியடித்து இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்து இருக்கிறது. காசாவில் இருந்து ஏவப்பட்ட இரண்டு டிரோன்களும் நிர் ஒஸ் மற்றும் என் ஹபிசர் பகுதியில் சுட்டுவீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து இருக்கிறது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 500ஐ கடந்தது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேரும், இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் 5 ஆயிரத்து 87 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்த போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பு குடிமக்களுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதலின் ஒரு பகுதியாக சயனைடு கலந்த ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த திட்டமிட்டு இருந்தது தெரிய வந்துள்ளது என இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேலுடன் போர் தொடுக்க நினைத்ததே ஹெஸ்புல்லா அமைப்பு தனது வாழ்வில் செய்துள்ள மிகப் பெரிய தவறு என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
காசாவுக்கு தேவையான மனிதநேய உதவி மற்றும் நிவாரண பொருட்களை தொடர்ந்து வழங்குவது உறுதி செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது என்று அமெரிக்க அதிபர் பைடன் தொலைபேசி வாயிலாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிடம் தெரிவித்தார்.
ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஈரான், லெபனான், சிரியா என பல நாடுகள் செயல்பட தொடங்கின. இஸ்ரேலுக்கான உதவிகளை அமெரிக்கா அளித்துவருகிறது. மத்திய கிழக்கில் மோதல்கள் அதிகரிக்கும் பட்சத்தில் தாக்குதல் நடத்த அமெரிக்கா தயங்காது என பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார்.
இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 177 சிறுவர்கள் உள்பட 266 பேர் காசாவில் கொன்று குவிக்கப்பட்டனர் என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவித்த 143 இந்தியர்களுடன் 6-வது விமானம் இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தது என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.