உலகம்

இந்தியாவை தொடர்ந்து வங்கதேசத்துடன் வர்த்தக ஒப்பந்தம் - வரியை 19% ஆக குறைத்த அமெரிக்கா

Published On 2026-02-10 13:54 IST   |   Update On 2026-02-10 13:54:00 IST
  • வங்கதேசம் தயாரிக்கும் ஆடை, ஜவுளிப் பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க அமெரிக்க அரசு முடிவு
  • அமெரிக்க விவசாயப் பொருட்களை வாங்க முன்னுரிமை அளிக்க வங்கதேசம் ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மீதும் 50 சதவீதம் கூடுதல் வரியை விதித்தார்.

இதைத்தொடர்ந்து வரியை குறைக்கும் வகையில், இருநாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது. இந்நிலையில், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும், இந்தியா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதாகவும் டிரம்ப் அறிவித்தார்.

அதன்படி அமெரிக்காவின் இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அதில், அமெரிக்காவிடமிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாய பொருட்களை இந்தியா வாங்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்

இதையடுத்து இருநாட்டு வர்த்தக ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கையும் வெளியானது. இடைக்கால ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கையை அமெரிக்கா சார்பில் வெள்ளை மாளிகை வெளியிட்டது.

இடைக்கால ஒப்பந்த அம்சங்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டார்.

அதில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் தானியக் கழிவுகள், கால்நடை தீவனங்களுக்கு வரிகுறைக்கப்படும். அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் விவசாயப் பொருட்களுக்கான வரியும் குறைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், வங்கதேசத்துடன் அமெரிக்கா புதிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதையடுத்து அந்நாட்டு மீதான வரியை 19% ஆக அமெரிக்கா குறைத்துள்ளது.

அதன்படி அமெரிக்காவின் பருத்தி மற்றும் நூற்பு இழைகள் மூலம் வங்கதேசம் தயாரிக்கும் ஆடை, ஜவுளிப் பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதற்குப் பதிலாக, அமெரிக்க விவசாயப் பொருட்களை வாங்க முன்னுரிமை அளிக்க வங்கதேசம் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News