செய்திகள்

மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தது ஆஸ்திரேலியா

Published On 2018-12-15 03:38 GMT   |   Update On 2018-12-15 03:38 GMT
மேற்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார். #Jerusalem #ScottMorrison #IsraelCapital
சிட்னி:

யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் புனித தலங்கள் அமைந்துள்ள ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தனது தலைநகர் என கூறி வருகிறது. 1967ல் கிழக்கு ஜெருசலேமை பிடித்ததிலிருந்தே, அது இந்நகரை தனது தலைநகராகக் கருதுகிறது. இது சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. இதேபோல் பாலஸ்தீனர்களும் கிழக்கு ஜெருசலேமை தங்கள் தலைநகராக கருதுகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார். கிழக்கு ஜெருசலேம் நகரில் அமெரிக்க அரசு தனது புதிய தூதரகத்தை திறந்தது. அமெரிக்காவை தொடர்ந்து கவுதமாலா உள்ளிட்ட சில நாடுகளின் தூதரகமும் ஜெருசலேம் நகரில் திறக்கப்பட்டது.



இந்நிலையில், மேற்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஆஸ்திரேலியா அங்கீகரித்திருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். ஆனால், அமைதி உடன்படிக்கை ஏற்படும்வரை தூதரகத்தை டெல்அவிவ் நகரில் இருந்து மாற்ற மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.

அமைதி உடன்படிக்கையில் கிழக்கு ஜெருசலேம் நகரின் நிலை குறித்து தீர்மானிக்கும்போது, எதிர்கால பாலஸ்தீனத்தின் நலன்களுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். #Jerusalem #ScottMorrison #IsraelCapital
Tags:    

Similar News