செய்திகள்

பின்லாந்தில் அடுத்த மாதம் சந்திக்கின்றனர் டொனால்ட் டிரம்ப் - விளாடிமிர் புதின்

Published On 2018-06-28 13:12 GMT   |   Update On 2018-06-28 13:12 GMT
அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புதின் ஆகிய இருவரும் அடுத்த மாதம் ஜூலை 16-ம் தேதி பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். #TrumpPutinSubmmit #HelsinkiSummit
வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றது முதலே ரஷியாவும் சர்ச்சைகளில் சிக்கி வந்தது. அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற ரஷிய உளவுத்துறை வேலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ விசாரித்து வருகிறது.

எனினும், இந்த குற்றச்சாட்டுகளை இரு நாடுகளும் மறுத்து வருகின்றன. பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் பனிப்போர் நீடித்து வரும் நிலையில், மூன்றாம் நாட்டில் சந்திப்பு நடத்த இரு தலைவர்களும் தயாராக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் 16-ம் தேதி பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் டிரம்ப் - புதின் சந்தித்து பேச முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை இன்று அறிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ள இரு தலைவர்களும், கூட்டாக செய்தியாளர்களை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, கடந்தாண்டு ஜெர்மனியில் நடந்த ஜி-5 உச்சி மாநாட்டில் இருவரும் சந்தித்து பேசியிருந்தனர். ஆனால், பின்லாந்தில் நடக்க இருக்கும் இந்த சந்திப்பு விரிவானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12-ம் தேதி வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சிங்கப்பூரில் சந்தித்து பேசிய டிரம்ப், வரலாற்றில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News