இந்தியாவின் 'நம்பர் 1' கார்: 2025-ல் விற்பனையில் வரலாறு படைத்த மாருதி டிசையர்
- ஜூலை மற்றும் நவம்பர் 2025 போன்ற மாதங்களில் மட்டும் தலா 20,000-க்கும் அதிகமான கார்கள் விற்பனை.
- மாருதி டிசையர் கார் Global NCAP விபத்து சோதனையில் 5-ஸ்டார் மதிப்பீடு பெற்றது.
2025-ஆம் ஆண்டில் இந்திய வாகன சந்தையில் ஒரு மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளது மாருதி சுசூகி நிறுவனத்தின் டிசையர் (Dzire) கார்.
எஸ்யூவி (SUV) ரக கார்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ள நிலையிலும், ஒரு செடான் ரக கார் 2 லட்சம் விற்பனையைத் தாண்டி சாதனை படைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
2025-ஆம் ஆண்டில் மாருதி டிசையர் சுமார் 2.14 லட்சம் யூனிட்டுகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் அதிகம் விற்பனையான காராக இது உருவெடுத்துள்ளது.
ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) போன்ற முன்னணி எஸ்யூவி-களை விடவும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
குறிப்பாக ஜூலை மற்றும் நவம்பர் 2025 போன்ற மாதங்களில் மட்டும் தலா 20,000-க்கும் அதிகமான கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்த மிகப்பெரிய விற்பனைக்கு முக்கிய காரணம் 2024 இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட நான்காம் தலைமுறை டிசையர் ஆகும். இதில் உள்ள சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. மாருதி நிறுவன வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த கார் Global NCAP விபத்து சோதனையில் 5-ஸ்டார் மதிப்பீடு பெற்றது. இது பாதுகாப்பை முக்கியமாக கருதும் நடுத்தர குடும்பங்களை ஈர்த்தது.
அனைத்து வேரியண்ட்டுகளிலும் 6 ஏர்பேக்குகள் தரநிலையாக வழங்கப்பட்டது ஒரு பெரிய பிளஸ் பாயிண்ட். இந்திய வாடிக்கையாளர்களின் பிரதான எதிர்பார்ப்பான மைலேஜில் டிசையர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
புத்தம் புதிய Z-சீரிஸ் 1.2 லிட்டர் எஞ்சின் எரிபொருள் சிக்கனத்தை இன்னும் அதிகரித்துள்ளது. பழைய மாடல்களை விட இந்த புதிய மாடல் தொழில்நுட்பத்தில் பின்தங்கவில்லை. எலக்ட்ரிக் சன்ரூஃப்,
360-டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என பல வசிகளை கொண்டுள்ளது.
சுருக்கமாகச் சொன்னால், விலை குறைவு, அதிக மைலேஜ், ஐந்து நட்சத்திர பாதுகாப்பு மற்றும் மாருதியின் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க் ஆகிய நான்கும் இணைந்துதான் 2.14 லட்சம் கார்கள் விற்பனையாகக் காரணமாக அமைந்தது.
வருடத்தின் முதல் ஆஃபர் மற்றும் செப்டம்பர் மாத GST இந்த விற்பனையை பெருமளவிற்கு ஊக்குவித்துள்ளது. மேலும், மொத்தமாக விற்பனையான DZIRE கார்களில் TOUR S வகை கார்களும் அடங்கும்.
2025 டிசம்பர் நிலவரப்படி, டிசையர் கார் தனது அறிமுகத்தில் இருந்து மொத்தமாக 30 லட்சம் (3 Million) உற்பத்தி மைல்கல்லையும் கடந்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.