தமிழ்நாடு செய்திகள்

'பொதுவெளியில் அவமதிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்' - காங்கிரஸ் எச்சரிக்கை... தொடர்ந்து புகையும் திமுக கூட்டணி!

Published On 2026-01-26 20:23 IST   |   Update On 2026-01-26 20:23:00 IST
  • கூட்டணி தர்மம் கருதியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காகவும் தான் அனுசரித்துப் போகிறோம்.
  • காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை ராகுல்காந்தி முடிவு செய்வார்

தமிழ்நாட்டில் 2026 ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளாக திமுக, அதிமுக கூட்டணியை இறுதிசெய்துவிட்டன. ஒருசில கட்சிகள் மட்டுமே இன்னும் கூட்டணியை அறிவிக்கவில்லை.

நாடாளுமன்ற தேர்தலின்போது உருவான திமுக தலைமையிலான இந்தியக் கூட்டணியே தொடரும் என திமுக தரப்பும், காங்கிரஸும், அதில் இடம்பெற்றுள்ள மற்ற கூட்டணி கட்சிகள் கூறினாலும், திமுக- காங்கிரஸ் இடையே உரசல் இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில் மீண்டும் திமுக-காங்கிரஸ் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது. திமுக மதுரை வடக்குத் தொகுதி எம்எல்ஏ தளபதி, 'வார்டுகளில் பூத் கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ்' என பேசியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

"மாணிக்கம் தாகூர், ஜோதி மணி போன்றோர் இன்று அதில் பங்கு வேண்டும். இதில் பங்கு வேண்டும் என்கிறார்கள். இந்த தேர்தலில் யார் எம்எல்ஏ ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன என அவர்கள் நினைக்கிறார்கள். இவையெல்லாற்றையும் தலைமை புரிந்து அவர்களுக்கு அடுத்த முறை 'சீட்'டே கொடுக்கக்கூடாது. நாம் இல்லாவிட்டால் இந்தியா கூட்டணியே கிடையாது. ஒரு தொகுதிக்கு 3000, 4000 ஓட்டு தான் இருக்கிறது. வார்டுகளில் பூத் கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ்" என மதுரையில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் திமுக எம்எல்ஏ கோ.தளபதி பேசியிருந்தார்.

இது கூட்டணிக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்த இவரின் இந்தப் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக மதுரை வடக்கு தொகுயில் போட்டியிட கார்கேயிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்திருந்தார். மேலும் அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது எனவும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணியும் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,  

"திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது. நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள், நான் கரூரில் இருக்கிறேன். என்னைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன இருக்கிறது? காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை எமது தலைவர் ராகுல்காந்தி முடிவு செய்வார். அது குறித்து உங்களிடம் யாரும் ஆலோசனை கேட்கவில்லை.

அதே போல காங்கிரஸ் கட்சியை இப்படி தொடர்ந்து பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். களத்தில் செயல்படுவதில் கடுமையான நெருக்கடிகள் உள்ளபோதும், கூட்டணி தர்மம் கருதியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காகவும் தான் அனுசரித்துப் போகிறோம். அமைதி காக்கிறோம்.

கூட்டணியின் கண்ணியம் கருதி இதுவரை நான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கூட பேசவேண்டிய இடத்தில் தான் பேசியிருக்கிறேன். வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர் நீங்கள். அதே கண்ணியத்தை நீங்களும் கடைபிடிப்பதுதான் நல்லது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் தலைவராக பொறுப்புடன் நடந்துகொள்ளும் முதலமைச்சர் அவர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காமல் அரசியல் செய்யுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது." எனக் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News