விஜய் - சி.பி.ஐ. - ஜன நாயகன் - தணிக்கை வாரியம் : நெருக்கடி கொடுக்கிறதா பா.ஜ.க.?
- U/A சான்றிதழை உடனடியாக வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
- ‘ஜன நாயகன்’ படம் வெளியாவதில் தொடர் இழுபறி ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய், முதலில் விஜய் ரசிகர் மன்றத்தை தொடங்கி அதன் மூலம் மக்களுக்கு உதவிகளை வழங்கி வந்தார். ஒரு புறம் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றுவது தொடர்பான வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே விஜய்க்கு பிரச்சனைகள் ஆரம்பித்து என்றே சொல்லலாம். அதாவது 'தலைவா', 'மெர்சல்' படங்கள் வெளியாவதில் சிக்கல்கள் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து படங்கள் வெளியாகின.
இதனிடையே, கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 'தமிழ வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கிய விஜய், அதே ஆண்டு அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டில் தனது அரசியல் திமுக என்றும் கொள்கை எதிரி பாஜக என்றும் அறிவித்தார். இதற்கு பிறகு அவரை சுற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தனர்.
இதையெல்லாம் கண்டுகொள்ளாத விஜய், கட்சியை பலப்படுத்தும் வேளைகளிலும், சட்டசபை தேர்தலை நோக்கி தீவிரமாக பணியாற்றி வருகிறார். இதனிடையே, தனது கடைசி படமான 'ஜன நாயகன்' படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக தெரிவித்தார். இதனால் 'ஜன நாயகன்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்த விஜய், மக்கள் சந்திப்பு பிரசாரத்தை தொடங்கினார். இதில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்காக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வருகிற திங்கட்கிழமை ஆஜராகும் படி விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 'ஜன நாயகன்' படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தணிக்கை குழு சான்றிதழ் வழங்காததால் பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தணிக்கை குழு சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கில் U/A சான்றிதழை உடனடியாக வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் சென்சார் போர்டு நீதிபதியின் உத்தரவை எதிர்த்து முறையிடுவதாகவும் அதனை வருகிற திங்கட்கிழமை விசாரிக்க வேண்டும் எனவும் முறையிட்டு உள்ளது. இதனால் 'ஜன நாயகன்' படம் வெளியாவதில் தொடர் இழுபறி ஏற்பட்டுள்ளது.
சென்சார் போர்டு வழக்கை தாக்கல் செய்தால் இன்றே விசாரிப்பதாக நீதிமன்றமே கூறும் நிலையில், தணிக்கை குழு ஏன் திங்கட்கிழமைக்கு விசாரிக்க வேண்டும் என்று சொல்கிறது என்ற வினா எழச்செய்கிறது. அதாவது, கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு வருகிற திங்கட்கிழமைசி.பி.ஐ. விசாரணை முன்பு விஜய் ஆஜராகிறார். இவ்விரு விஷயங்களை வைத்து விஜய்க்கு அழுத்தம், நெருக்கடி தரப்படுவதாகவே அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதனிடையே, கரூர் விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்து பா.ஜ.க.வும், 'ஜன நாயகன்' பட விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்து காங்கிரசும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தன.
எனவே, வருகிற சட்டசபை தேர்தலை மையமாக கொண்டு விஜயை கூட்டணியில் இழுக்கும் முயற்சி நடைபெற்று வருவதாகக் கூறப்படும் நிலையில், விஜய் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.