தமிழ்நாடு செய்திகள்

கரூர் பிரசாரத்தில் 41 பேர் பலி: யார் சதி செய்திருந்தாலும் அவர்கள் குடும்பம் விளங்காது- செல்லூர் ராஜூ

Published On 2025-10-02 13:39 IST   |   Update On 2025-10-02 13:39:00 IST
  • கரூர் சம்பவத்தில் விஜய் மீது அதிகமாகவே விமர்சனங்கள் வந்துவிட்டன.
  • சம்பவம் நடந்தவுடன் உடனடியாக விசாரணை ஆணையத்தை தி.மு.க. அரசு நியமித்தது எப்படி?

மதுரை:

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கரூரில் நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது மிகுந்த மனவேதனையையும், வயிற்றெரிச்சல், ஐயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

விஜய் இப்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார். அரசியலைப் பொறுத்தவரை அவர் புதுமுகம். அதனால் அவரை ஆளாளுக்கு விமர்சனம் செய்யக்கூடாது. ஏற்கனவே கரூர் சம்பவத்தில் விஜய் மீது அதிகமாகவே விமர்சனங்கள் வந்துவிட்டன.

கரூரில் த.வெ.க.வினர் கேட்ட இடத்தில் போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. 10 ஆயிரம் பேர் கூடும் இடத்தில் 27 ஆயிரம் பேர் திரண்டதால் தான் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது, இது வருத்தமாக உள்ளது.

எனவே த.வெ.க. தலைவர் விஜய் மாவட்டந்தோறும் பஸ்சில் செல்லாமல் ஒவ்வொரு தொகுதி வாரியாக செல்ல வேண்டும்.

கரூர் சம்பவத்தில் அப்பாவி பெண்களும், குழந்தைகளும் மரணம் அடைந்த துயரத்தில் இத்தனை உயிர்கள் பறிபோனதற்கு அரசியல் சதி இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். இத்தனை உயிர்களை காவு கொடுத்த நிகழ்வுக்கு யார் சதி செய்திருந்தாலும் அவர்கள் குடும்பம் விளங்காது.

கரூரில் அதே இடத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய அனுமதி கேட்டபோது, அந்த இடத்தில் நெரிசல் ஏற்படும் என போலீசார் அனுமதி மறுத்தனர். பின்னர் அனுமதி கொடுத்தனர். அது போல த.வெ.க.வினர் கேட்டபோது அந்த இடத்தில் அனுமதியை மறுத்து வேறு அகலமான இடத்தை அவர்களுக்கு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் போலீசார் அப்படி செய்யவில்லை. மேலும் விஜய் காலதாமதமாக அந்த பகுதிக்கு வந்துள்ளார். அவரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. சம்பவம் நடந்தவுடன் உடனடியாக விசாரணை ஆணையத்தை தி.மு.க. அரசு நியமித்தது எப்படி?

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News