அ.தி.மு.க.வுடன், விஜய் கட்சி கூட்டணி அமைத்தால் நல்லதுதான்- ஆர்.பி.உதயகுமார்
- திண்ணை பிரசாரத்தின் மூலமாக 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியடையும்.
- 234 தொகுதிகளிலும் வெல்வதுதான் அ.தி.மு.க.வின் லட்சியம்.
சென்னை:
சென்னை வியாசர்பாடி பகுதியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. சார்பில் வாரம்தோறும் திண்ணை பிரசாரத்தின் மூலமாக துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறோம். 11-வது வாரமாக திண்ணை பிரசாரம் தொடர்ந்து வருகிறது.
இன்று விண்ணை முட்டுகின்ற அளவுக்கு விலைவாசி, மின்சார கட்டணம், சொத்து வரி உயர்ந்துள்ளது. போதைப்பொருள் நடமாட்டம், பாலியல் வன்கொடுமைகள் என்பது போன்ற அவலங்களில் இருந்து தமிழக மக்களை மீட்டெடுப்பதற்காக உரிமைகளை காப்பாற்றுவதற்காக திண்ணை பிரசாரம் நடத்துகிறோம்.
இந்த திண்ணை பிரசாரத்தின் மூலமாக 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியடையும். 234 தொகுதிகளிலும் வெல்வதுதான் அ.தி.மு.க.வின் லட்சியம். 200 தொகுதிகளில் அ.தி.மு.க. வெல்வது நிச்சயம். சட்டசபையில் ஆளும் கட்சியினர் நேரலையில் பேசினால் தொழில்நுட்ப கோளாறு வருவதில்லை. எடப்பாடி பழனிசாமி பேசினால் உடனே தொழில்நுட்ப கோளாறு வருகிறது. இது பாரபட்சமான நடவடிக்கை.
எடப்பாடி பழனிசாமி என்ன கேள்வி கேட்கிறார், என்ன மக்கள் பிரச்சனைகளை பேசுகிறார் என்று மக்களுக்கு தெரிந்தால்தான் அதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்கிறார் என்பது மக்களுக்கு புரியும்.
ஊமை படம் போன்று அவர்கள் பேசுவதை மட்டும் காட்டுகிறார்கள். வடக்கு எது, கிழக்கு எது, தெற்கு என்று தெரியாத நிலைதான் சட்டசபையில் நிலவுகிறது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார். அப்போது சட்டசபை ஜனநாயகம் காப்பாற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவரிடம் அ.தி.மு.க. கூட்டணியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதில் அளித்த ஆர்.பி.உதயகுமார், 'உங்கள் எண்ணம் நல்ல எண்ணம். நல்ல எண்ணத்தோடு கேட்கிறீர்கள். நல்லதாகவே நடக்கட்டும்' என்றார்.