தமிழ்நாடு செய்திகள்

எங்கள் கூட்டணியில் எவ்வித முரண்பாடும் இல்லை- நயினார் நாகேந்திரன்

Published On 2025-06-28 12:59 IST   |   Update On 2025-06-28 12:59:00 IST
  • வேண்டாம் தி.மு.க. வேண்டாம் என்பது தான் எங்களது கோஷம்.
  • இன்றளவும் தமிழகத்தில் நட்சத்திர ஓட்டல்களில் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கிறது.

நெல்லை:

நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜ.க மானூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பொன் ரமேஷ் ஏற்பாட்டில் சுத்தமல்லி, கங்கைகொண்டான், ராமையன்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பிரதமர் மோடி அரசின் சாதனைகளால் ஈர்க்கப்பட்டதாகவும், அவரது திட்டங்களால் பயனடைந்ததாகவும் கூறி இன்று பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் தங்களை பா.ஜ.க.வில் இணைத்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் நிருபர்களை சந்தித்த நயினார்நாகேந்திரன் கூறியதாவது:-

எங்களுடைய தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியானது. எங்கள் கூட்டணியில் எந்தவித முரண்பாடும் இல்லை. கருத்து வேறுபாடும் இல்லை. கூட்டணி குறித்து என்னிடம் மட்டும் தான் கேள்வி கேட்கிறீர்களே தவிர முதலமைச்சரிடம் யாரும் போய் கேள்வி கேட்பதில்லை.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவீர்கள் என்று உங்களால் கேள்வி கேட்க முடியுமா? தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளது. தேர்தல் சமயத்தில் என்னிடம் கூட்டணி பற்றி கேளுங்கள். சிறப்பான கூட்டணி அமையும். வேண்டாம் தி.மு.க. வேண்டாம் என்பது தான் எங்களது கோஷம். அதனை தமிழக மக்கள் பிரதிபலிப்பார்கள். தி.மு.க. என்ன செய்தாலும் ஆட்சிக்கு வர முடியாது. அரசியல் சம்பந்தம் இல்லாமல் எந்த அரசியல் கட்சித் தலைவரும் மற்றொரு அரசியல் கட்சி தலைவரை போய் சந்திப்பது கிடையாது. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை டாக்டர் ராமதாசை சந்தித்ததிலும் அரசியல் கண்டிப்பாக இருக்கும்.

பா.ஜ.க.வில் புதிய மாநில நிர்வாகிகள் பட்டியலை டெல்லி மேல் இடத்தில் கொடுத்துள்ளோம். விரைவில் புதிய மாநில நிர்வாகிகளுக்கான அறிவிப்பு வெளியாகும். தமிழ்நாட்டில் ஆதி திராவிடர் பள்ளிகளில் ஆசிரியர்கள் குறைபாடு இருக்கிறது. 96 ஆயிரம் மாணவர்கள் அந்த பள்ளியில் படித்தனர். தற்போது 67 ஆயிரம் மாணவர்கள் தான் படிக்கின்றனர். அந்தப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை 20 சதவீதம் வரை இருக்கிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்களுக்கு மனதில் மாற்றம் வர வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட சாலைகளை சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி தான் நடக்கிறது என்று கூறுகிறார்கள். அது தவறு. தமிழகத்தில் தினமும் பாலியல் சம்பவங்கள் நடக்கிறது. கொகைன் உள்ளிட்ட போதைப்பொருள்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இன்றளவும் தமிழகத்தில் நட்சத்திர ஓட்டல்களில் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கிறது. இதுதான் ஆன்மீக அரசியலா?

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News