தமிழ்நாடு செய்திகள்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும்- நயினார் நாகேந்திரன்

Published On 2025-06-27 13:35 IST   |   Update On 2025-06-27 13:35:00 IST
  • இந்து முன்னணி நடத்திய மாநாட்டில் நாங்கள் கலந்து கொண்டோம். அவ்வளவு தான்.
  • குடும்ப ஆட்சியை மக்கள் நிச்சயமாக விரும்பமாட்டார்கள்.

நெல்லை:

தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. இன்று பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தனது இல்லத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. அண்மையில் நடத்திய முத்தமிழ் முருகர் மாநாடு உண்மையான முருகர் மாநாடு கிடையாது. முருகருடைய அருள் எங்களுக்குத்தான் கிடைக்கும்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், கடவுளை கல்லாக நினைத்து தூக்கிப் போட்டு உடைப்பவர்கள், மற்ற மதங்களை இழிவாக பேசுபவர்கள் முருகர் மாநாடு நடத்தினால், முருகர் எப்படி அவர்கள் பக்கம் போவார்.

மதுரையில் நாங்கள் நடத்திய முருகர் மாநாட்டில் 5 லட்சம் பேருக்கும் மேல் கலந்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது முழுக்க முழுக்க ஒரு பக்தி மாநாடு தான். அதில் நாங்கள் யாரையும் தவறான இடத்திற்கு கொண்டு செல்லவோ, குறை சொல்லவோ இல்லை.

அரசியல் பேசவில்லை. பிற மதங்களையோ, யாரையும் புண்படுத்தியோ பேசவில்லை. இந்த மாநாட்டில் எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்கவும் இல்லை.

இந்து முன்னணி நடத்திய மாநாட்டில் நாங்கள் கலந்து கொண்டோம். அவ்வளவு தான். இதைத் தேர்தல் பயன்பாட்டிற்காகவோ, மக்களை குழப்புவதற்காகவோ, வாக்கு வங்கியாக மாற்றவோ நாங்கள் முயற்சிக்கவில்லை.

திருச்செந்தூர் கும்பாபிஷேகம் பக்தர்களுக்கு பொதுவானது. தி.மு.க. தனது பெயருக்காக அதனை மாற்ற பயன்படுத்துகிறது.

அவர்கள் முதலில் ஒரு முருகன் மாநாடு நடத்தினர். அது முருகர் பக்தி மாநாடா என்று எங்களுக்குத் தெரியாது. நாங்கள் நடத்தியது முருகர் பக்தர்களுடைய மாநாடு. ஆனால் இப்போது அவர்கள் அதை திசை திருப்பி, தி.மு.க.வுக்கு சாதகமான வாக்கு வங்கியாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார்.

கேள்வி: 2026 சட்டமன்றத் தேர்தலிலும், 2031, 2036 தேர்தல்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளாரே?

பதில்: தி.மு.க. தொடர்ந்து 2-வது முறையாக ஜெயித்ததாக வரலாறு கிடையாது. அந்த வரலாறு மாறப் போவதில்லை. அதனால் அவர்கள் சொல்வதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குடும்ப ஆட்சியை மக்கள் நிச்சயமாக விரும்பமாட்டார்கள். அதற்கு அடுத்த தலைமுறை ஆட்களும் தயாராக இருக்கிறார்கள். அதை நிச்சயமாக யாரும் விரும்பமாட்டார்கள்.

அ.தி.மு.க.-பா.ஜ.க கூட்டணி என்று அமித்ஷா சொன்னதில் இருந்து தி.மு.க.வினர் பயத்தில் ஒன்று சொல்லி, அதனை மாற்றி மாற்றிச் சொல்கின்றனர். அவர்களுக்கு தேர்தல் பயம், தோல்வி பயம் வந்துவிட்டது.

கேள்வி: 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று அமித்ஷா கூறியுள்ளார். அதற்கு அ.தி.மு.க.வை சேர்ந்த வைகை செல்வன், கூட்டணி ஆட்சி அமைக்க தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள் எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: இதைப்பற்றி அமித்ஷாவும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பழனிசாமியும் பேசுவார்கள்.

கேள்வி: கூட்டணி ஆட்சியின்போது முதலமைச்சர் யார்? என்பது குறித்து அமித்ஷா பேசிய போது பழனிசாமியின் பெயரை சொல்லவில்லையே?

பதில்: எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் என்று ஏற்கனவே அமித்ஷா சொல்லிவிட்டார். இன்று பேசுவதை சொல்லக்கூடாது.

கேள்வி: விஜய் கூட்டணிக்கு வருவாரா?

பதில்: நல்லதே நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News