தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. கூட்டணிக்குள் எந்த குழப்பமும் இல்லை, யாராலும் உடைக்கவும் முடியாது- அமைச்சர் ரகுபதி

Published On 2026-01-18 13:18 IST   |   Update On 2026-01-18 13:18:00 IST
  • எப்போதும் தேர்தல் தேதி அறிவித்த பின்பு தான் தேர்தல் அறிக்கையை எந்த கட்சியும் வெளியிடும்.
  • யார் அந்த டி.டி.வி.தினகரன்? அவருக்கு அரசியலே தெரியாது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள அறிவிப்புகள் அனைத்தும் பேஸ்ட் காப்பி அடிப்படையிலேயே உள்ளது. கடந்த தேர்தலின் போது மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறினோம். அப்போது எடப்பாடி பழனிசாமி குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து படிக்க வைப்பதை போல் மகளிருக்கு ஆசை வார்த்தை கூறி உரிமைத்தொகை தர போகிறோம் என்று தி.மு.க. கூறியுள்ளது என்று சொன்னார்.

உங்களால் உரிமைத்தொகை கொடுக்க முடியாது என்று கூறியவர், இன்று 2000 ரூபாய் கொடுக்க முடியும் என்று கூறியதில் இருந்தே மகளிருக்கு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் எந்த அளவிற்கு மகளிர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ள வரவேற்பையும் எடுத்துக்காட்டி உள்ளது என்பதை அறியலாம்.

எப்போதும் தேர்தல் தேதி அறிவித்த பின்பு தான் தேர்தல் அறிக்கையை எந்த கட்சியும் வெளியிடும். அவசர அவசரமாக பந்திக்கு முந்திக்கொண்டு செல்வதைப் போல எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஆனால் அங்கு பந்தியே போடவில்லை, அவர் காத்திருக்கத்தான் வேண்டும். பந்தி போட்டவுடன் நாங்கள் வந்து அமர்ந்து சாப்பிட்டு விட்டு சென்று விடுவோம். எடப்பாடியால் எந்த நிதி நிலையையும் சரி செய்ய முடியாது. அவரின் திறமை என்ன என்பதை மக்கள் பார்த்துவிட்டார்கள். அவரால் திறமையாக எதையும் செயல்படுத்த முடியாது.

ராகுல் காந்தி தான் கூட்டணி குறித்து அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளது. எனவே கூட்டணிக்குள் எந்த குழப்பமும் ஏற்படாது. யாராலும் அதனை உடைக்க முடியாது. சிலர் எதிர்பார்க்கிறார்கள், அது நடக்காது. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் எங்கள் கூட்டணியை விட்டு யாரையும் அனுப்புவது கிடையாது, அந்த பழக்கமும் கிடையாது. அவர்களை அரவணைப்பது தான் தமிழ்நாடு முதலமைச்சர் பழக்கம். தற்போதும் அவர்களை அரவணைத்து கொண்டு தான் இருக்கிறார். அந்த அரவணைப்பிலிருந்து யாராவது செல்ல வேண்டும் என்று நினைத்தால் நாங்கள் பொறுப்பாக முடியாது. எங்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் எங்களோடு இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதற்கு எங்கள் தலைவர் தெளிவான பதிலை சொல்லிவிட்டார்.

வரக்கூடிய தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என டி.டி.வி.தினகரன் ஜாதகம் பார்த்து ஜோசியம் சொல்கிறார். யார் அந்த டி.டி.வி.தினகரன்? அவருக்கு அரசியலே தெரியாது. நாங்கள் தனித்து ஆட்சி அமைக்க கூடிய அளவிற்கு வெற்றி பெறுவோம். நிச்சயம் தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும் என்றார். 

Tags:    

Similar News