தமிழ்நாடு செய்திகள்

உறுதியான திமுக - காங்கிரஸ் கூட்டணி... தனித்து விடப்பட்ட தவெக - என்ன செய்யப்போகிறார் விஜய்?

Published On 2026-03-04 20:44 IST   |   Update On 2026-03-04 20:44:00 IST
  • காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் அதிக இடங்களை கோரியது.
  • திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி ஏற்பட்டது,

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. பல கட்டங்களாக நடைபெற்ற தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இன்று இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டப்பேரவை இடங்களும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தவெகவை காரணம் காட்டி காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் அதிக இடங்களை கோரியது. இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி ஏற்பட்டது,

தொகுதிப் பங்கீட்டில் நிலவி வந்த இழுபறியைத் தீர்க்க, காங்கிரஸ் மேலிடம் சார்பில் மூத்த தலைவர் ப. சிதம்பரம் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து கூட்டணியில் இணக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் சற்றுநேரத்திற்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஆர். பாலு, கனிமொழி, செல்வப்பெருந்தகை மற்றும் காங்கிரஸ் குழுவினர் அண்ணா அறிவாலயத்தில் கூடினர். இந்நிலையில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆட்சியில் பங்கு என்று கூறி திமுக கூட்டணி கட்சிகளுக்கு தவெக தூது விட்டது. விசிக இந்த வலையில் முதலில் விழும் என்று எதிர்பார்த்த தவெகவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து திமுக கூட்டணி நாளுக்கு நாள் வலுவானது. தேமுதிகவும் திமுக கூட்டணியில் இணைந்தது.

இதனிடையே காங்கிரஸ் கட்சியுடன் தவெக மறைமுகமாக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி பங்கீடு இறுதி செய்ததால் தவெகவிற்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. திமுக கூட்டணியும் அதிமுக கூட்டணியும் உறுதியாகியுள்ளதால் நாம் தமிழர் கட்சி போல தனித்து போட்டியிட வேண்டிய நிலைமைக்கு தவெக தள்ளப்பட்டுள்ளது.

Tags:    

Similar News