பாமகவுக்கு ஒரு சீட்.... மாநிலங்களவை தேர்தல் வேட்பாளரை அறிவித்தது அதிமுக!
- திமுக தரப்பில் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
- பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாகும் 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அதிமுக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 16.3.2026 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தம்பிதுரை தேர்ந்தெடுத்து நிறுத்தப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
திமுக தரப்பில் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மற்ற இரண்டு சீட்டுகளை கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவிற்கும், காங்கிஸுற்கும் ஒதுக்கியுள்ளது திமுக.