தமிழ்நாடு செய்திகள்

நிர்வாகத் தோல்வியை மறைக்க யாரையோ கைது செய்து திமுக அரசு நாடகமா? நயினார் நாகேந்திரன் கேள்வி

Published On 2025-06-09 17:46 IST   |   Update On 2025-06-09 17:46:00 IST
  • மூதாட்டி நகைக்காக கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது.
  • குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி நகைக்காக கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொங்குப் பகுதிகளில் இதுவரை நடந்த அனைத்து கொலை, கொள்ளைகளுக்கும் காரணமானவர்களைக் கண்டு பிடித்து கைது செய்துவிட்டோம் என திமுக அரசு ஒருபுறம் மார்தட்டிக் கொண்டிருக்க, அதே பகுதியில் அதே பாணியில் மீண்டுமொரு கொலை அரங்கேறியுள்ளது, மக்களை குழப்பத்திலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.

தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்கவும் மக்களின் கண்டனக் குரல்களை ஒடுக்கவும் யாரையோ கைது செய்துவிட்டு குற்றவாளி அகப்பட்டுவிட்டதாக திமுக அரசு நாடகமாடுகிறதா? என்ற சந்தேகமும் மக்கள் மனதில் வலுக்கிறது.

எனவே, தமிழகத்தில் குறிப்பாக கொங்குப் பகுதிகளில் பெருகி வரும் கொலை, கொள்ளை குற்றங்களின் மூளையாக செயல்படுவோர் யார் என்பதை கண்டறிந்து அவர்களுக்கு தக்க தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News