தமிழ்நாடு செய்திகள்

கேலி கூத்தான தீர்மானங்கள்- பா.ம.க. டாக்டர் ராமதாசின் குடும்ப சொத்து அல்ல: அன்புமணி தரப்பு பதிலடி

Published On 2025-12-29 13:24 IST   |   Update On 2025-12-29 13:24:00 IST
  • விமர்சனங்களை காந்திமதி இன்றோடு நிறுத்தி கொள்ள வேண்டும்.
  • இல்லாவிட்டால் பல விஷயங்களை நாங்களும் சொல்ல நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.

சென்னை:

சேலத்தில் இன்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுவில் பா.ம.க. தலைவர் அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்தும் விமர்சித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதற்கு அன்புமணி தரப்பு பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக வக்கீல் பாலு கூறியதாவது:-

சேலத்தில் இன்று அவர்கள் எடுத்த முடிவுகள் எதுவும் எங்களை கட்டுப்படுத்தாது. இரண்டு கேலி கூத்தான தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறார்கள். அதாவது, பா.ம.க. தலைவராக டாக்டர் ராமதாசை தேர்வு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்கள். அப்படியானால், இதுவரை பேசியது பொய்யா? டாக்டர் ராமதாசை பொதுக்குழுவில் முறைப்படி தலைவராக தேர்வு செய்துவிட்டதாகவும், அதை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்து விட்டதாகவும் ஐகோர்ட்டு அங்கீகரித்துவிட்டதாகவும் கூறி வந்தார்கள். அப்படியானால் இப்போது தலைவரை தேர்வு செய்திருப்பதாக கூறுவது ஏன்?

ஒரு கட்சியின் புதிய தலைவரை அந்த கட்சியின் தலைவராக இருப்பவர்தான் பொதுக்குழுவை கூட்டி தேர்வு செய்ய முடியும். அதன்படி, பா.ம.க. தலைவராக இருக்கும் அன்புமணிதான் பொதுக்குழுவை கூட்டி புதிய தலைவரை தேர்வு செய்ய முடியும்.

இன்னொரு கேலி கூத்தான தீர்மானத்தையும் சொல்லி உள்ளார்கள். அதாவது, பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்து சவுமியா அன்புமணியை நீக்கி இருப்பதாக கூறியிருக்கிறார்கள். சவுமியா அன்புமணி ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பில் நீண்ட நாட்களாக தலைவராக இருக்கிறார். அவரை நீக்க வேண்டுமென்றால் அந்த அமைப்பின் பொதுக்குழுதான் கூடி முடிவெடுக்கும். இன்னொரு அமைப்பு அந்த முடிவை எடுப்பதற்கு என்ன உரிமை உள்ளது?

காந்திமதி எங்கள் தலைவரை மிக மோசமாக தரக்குறைவாக விமர்சித்துள்ளார். அதை கடுமையாக கண்டிக்கிறோம். ஏற்றுக் கொள்ள மாட்டோம். அன்புமணி எங்கள் கட்சியை வழிநடத்தி வரும் தலைவர். அவரை யார் விமர்சனம் செய்தாலும் ஏற்க மாட்டோம். அது அக்காவாக இருந்தாலும் சரி, அக்கா-தம்பி சண்டை இருந்தால் வீட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.

பா.ம.க. டாக்டர் ராமதாசின் குடும்ப சொத்தும் அல்ல. இந்த விமர்சனங்களை காந்திமதி இன்றோடு நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பல விஷயங்களை நாங்களும் சொல்ல நேரிடும் என்று எச்சரிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News