ஆட்சியில் பங்கு கேட்டவர்கள் சீட் கொடுத்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்- காங்கிரசுக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி
- காங்கிரசில் ராகுல் காந்தி, கார்கே, செல்வப்பெருந்தகை கேட்டால் பதில் சொல்லலாம்.
- எல்லோரும் கேட்டால் அதற்கு பதில் சொல்ல முடியாது. இவர்கள் 3 பேர்தான் அத்தாரிட்டி.
சென்னை:
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி:- தி.மு.க. தோல்வி பயம் காரணமாக ரூ.5 ஆயிரம் கொடுத்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்களே?
பதில்:- எதிர்க்கட்சிகள் அப்படித்தான் குற்றம் சாட்டுகிறார்கள். அவர்களுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. நாங்கள் இப்போது கொடுக்கவில்லை.
மாதம் தோறும் ரூ.1000 கொடுக்கிறோம். அ.தி.மு.க. பா.ஜ.க. வுடன் சேர்ந்து கொண்டு இந்த திட்டத்தை தடுக்க சதி திட்டம் தீட்டினார்கள்.
அந்த சதி திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிந்ததால் அதற்கு தடை வாங்கி விடக்கூடாது என்பதற்காக முன் கூட்டியே பணத்தை கொடுத்துள்ளார்.
கே:- தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியம் இல்லை என்று முதலமைச்சர் அறிவித்த பிறகும் ஒருசில காங்கிரஸ் தலைவர்கள் அது தொடர்பாக மீண்டும் பேசுகிறார்களே?
ப:- நாளையில் இருந்து யாரும் பேசமாட்டார்கள். 5 ஆயிரம் ரூபாய் கொடுத்த பிறகு மக்களுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்பது எல்லா அரசியல்வாதிகளுக்கும் தெரியும். அதனால் இனி பேசமாட்டார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறிவிட்டார். கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் கிடையாது என்பதை தெளிவுபடுத்திவிட்டார். ராகுல்காந்தி முதல் மற்றவர்களும் அதை ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.
காங்கிரசில் ராகுல்காந்தி, கார்கே, செல்வப்பெருந்தகை கேட்டால் பதில் சொல்லலாம். எல்லோரும் கேட்டால் அதற்கு பதில் சொல்ல முடியாது. இவர்கள் 3 பேர்தான் அத்தாரிட்டி.
ஆட்சியில் பங்கு என்று கேட்டவர்கள் அனைவரும் இப்போது சீட் கொடுத்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.
கே: திருச்சி மாநாட்டில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் பங்கேற்பார்களா?
ப: தலைவர் அது பற்றி சொல்வார் என்றார்.