தமிழகத்தில் 19-ந்தேதி முதல் லேசான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்
- 19-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
- நாளை முதல் 19-ந்தேதி வரை வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்தில் உருவாகக்கூடும்.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 18-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
19-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
20-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பனிமூட்டம் பற்றிய முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:
நாளை முதல் 19-ந்தேதி வரை வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 15 ஆம் தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் 16-ந்தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
திருவள்ளூர், சேலம், தர்மபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 17 ஆம் தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 18 ஆம் தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 19 ஆம் தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:-
18-ந்தேதி மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.