நீதிபதியாக இருக்கவே தகுதியற்றவர்.. திருப்பரங்குன்ற விவகாரத்தில் பெ.சண்முகம் வீடியோ வெளியிட்டு ஆவேசம்
- உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள சிஐஎஸ்எஃப் வீரர்களை கூட்டிக்கொண்டு மனுதாரர் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
- தமிழ்நாட்டை கலவர காடாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.
கார்த்திகை தீபத் திருவிழாவில் மதுரை திருப்பரங்குன்றத்தில் வழக்கப்படி உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே நேற்று தீபம் ஏற்றப்பட்டது.
ஆனால் திருப்பரங்குன்றம் மலை மீது, வழக்கத்திற்கு மாறாக சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் 15 மீ தொலைவில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
ஆனால் உத்தரவுப்படி தக்ரா அருகே ஏற்றாமல் எப்போதும்போல உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்டது.
இதனால் உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள சிஐஎஸ்எஃப் வீரர்களை கூட்டிக்கொண்டு மனுதாரர் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் போலீசார் மலை ஏற அனுமதி மறுக்கவே சிஐஎஸ்எஃப் வீரர்கள் திரும்பிச் சென்றனர்.
இதனிடையே மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றாததைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மலையேற முயற்சித்து போலீசாருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் தள்ளுமுள்ளலில் ஈடுபட்டனர். மேலும் தடுப்புகளை தூக்கி எறிந்தும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் போலீசார் ஒருவர் காயமும் அடைந்துள்ளார்.
144 தடை உத்தரவு அமலில் உள்ள சூழலில் மலையேற அனுமதி வழங்காததால் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆர்பாட்டக்காரர்கள் மலைக்குச் செல்லும் வழியில் சூடமேற்றி வணங்கிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதற்கிடையே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிரான தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்த நிலையில், நாளை முதல் வழக்காக விசாரிப்பதாக நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் சுவாமிநாதன் நீதிபதியாக இருக்கவே தகுதியற்றவர் என்று சிபிஎம் மாநில செயலாளர் பெ சண்முகம் வீடியோ வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய அவர், கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பதுதான் எல்லா மக்களுடைய விருப்பமே தவிர அது குறிப்பிட்ட அந்த இடத்தில் தான் ஏற்ற வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது என்பது யாராலும் ஏற்கத்தக்க முடியாத ஒரு விஷயம்.
நீதிமன்றதிற்கு பாதுகாப்பு வழங்கி வரும் மத்திய படையினரை திருப்பரங்குன்றம் அனுப்பியது கண்டிக்கத்தக்கது. நீதிபதி சுவாமிநாதன் மாநில அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடிக்கிறார். இந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்பளிப்பதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார்.
அவரது செயல்பாடுகள் மக்களுக்குள் பகைமையை ஏற்படுத்தும் விதமாகவே இருந்து வருகிறது. நீதிபதியாக தொடரவே அவருக்கு தகுதியில்ல்லை.
இப்படி மக்கள் மத்தியிலே மோதலையும் மாநில அரசாங்கத்திற்கும், மத்திய படைக்குமான மோதலை உருவாக்கக்கூடிய வகையில் உத்தரவை வெளியிட்டிருக்கிற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது தலைமை நீதிபதி அவர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டை கலவர காடாக மாற்ற முயற்சிக்கிறார்கள். உறுதியான நிலைப்பாட்டை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்" என்று தெரிவித்துள்ளார்.