தமிழ்நாடு செய்திகள்

வாக்காளர் விண்ணப்பம் வழங்குவதில் மோசடி- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

Published On 2025-11-24 17:24 IST   |   Update On 2025-11-24 17:24:00 IST
  • விண்ணப்பங்களை கொடுக்காமலேயே தவறான தகவலை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்துள்ளனர்.
  • விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் ஆளும் கட்சியினரிடம் தான் இருக்கிறதா இந்த கேள்வி எழுந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர். விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏறக்குறைய 50 சதவீதம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், நிறைய வாக்காளர்கள் தங்களது விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ இன்று மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன் குமாரை சந்தித்து புகார் மனு அளித்தார்.

மதுரை மாநகர் பகுதியில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில் இதுவரை 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை மட்டுமே வாக்காளர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. வீடு, வீடாக சென்று விண்ணப்ப படிவத்தை வழங்குவோம் என்று கூறினார்கள், மூன்று முறை வீட்டு கதவை தட்டுவோம் என்றார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சரியான பயிற்சி இல்லை. இதன் காரணமாக வாக்காளர்களுக்குரிய விண்ணப்பபடிவங்கள் அவர்களை சென்று சேரவில்லை. மேலும், விண்ணப்ப படிவங்களை பெற்றவர்கள் குறைந்த அளவிலேயே, அதாவது 40 சதவீதத்திற்கு உள்ளேயே தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர். இந்த நிலையில் மேற்கு சட்டமன்ற தொகுதியில் அனைத்து வாக்காளர்களுக்கும் அவர்களுக்குரிய வாக்காளர் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட நபர்களுக்கு விண்ணப்பங்களை கொடுக்காமலேயே இப்படி தவறான தகவலை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்துள்ளனர். இதில் பெரிய மோசடி நடந்துள்ளதாக கருதுகிறோம். இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தோம்.

ஆனால் கலெக்டர் தேர்தல் கமிஷன் வழங்கியுள்ள நாட்களுக்குள் அனைத்து பணிகளையும் முடித்து விடுவோம் அப்படி ஏதாவது விடுபட்டவர்கள் இருந்தால் அடுத்த மாதம் 4-ந்தேதிக்கு மேல் அதற்குரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம் என்கிறார். அது எப்படி முடியும் அது முடிகிற காரியமா? எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஆளும் கட்சியான தி.மு.க. இந்த வாக்காளர் விண்ணப்ப படிவத்தை அதிகளவில் பெற்றுள்ளனர். அவர்களுடைய தலைவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுடன் பேசி வருகிறார். அப்போது அந்த நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு உரிய விண்ணப்ப படிவங்களை கொடுத்து வருகிறோம் என்று கூறுகிறார். அப்படி என்றால் அந்த விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் ஆளும் கட்சியினரிடம் தான் இருக்கிறதா இந்த கேள்வி எழுந்துள்ளது.

எனவே தேர்தல் அதிகாரிகள் நேர்மையான முறையில் செயல்பட்டு அனைத்து வாக்காளர்களிடம் அவர்களுக்கு உரிய விண்ணப்ப படிவங்களை கொண்டு சேர்க்க வேண்டும். அப்போதுதான் உண்மையான வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற முடியும். இல்லாவிட்டால் அதில் ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதனையும் மாவட்ட கலெக்டர் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News