தமிழ்நாடு செய்திகள்

'அமெரிக்காவுக்கு அடிமையாக இருப்பது பாஜகவிற்கு பெருமையாக இருக்கலாம்... ஆனால்' - பெ.சண்முகம்

Published On 2026-03-06 19:21 IST   |   Update On 2026-03-06 19:21:00 IST
  • மோடி இந்தியாவை அமெரிக்காவின் அடிமை நாடாக மாற்றிவிட்டார்
  • இந்தியா பாஜக ஆட்சியில் பாதுகாப்பாக இல்லை

ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றத்தால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க, இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்க கருவூலத் துறை (US Treasury Department) 30 நாட்களுக்கு விலக்கு அளித்துள்ளது. இதற்கு இந்திய அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காரணம், ஒரு நாடு யாரிடம் எண்ணெய் வாங்கவேண்டும் என இன்னொரு நாடு எப்படி அனுமதி அளிக்கும் அல்லது உத்தரவிடும் என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

அந்தவகையில், அமெரிக்காவின் இந்த அனுமதி தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், 

"பிரதமர் மோடி இந்தியாவை அமெரிக்காவின் அடிமை நாடாக மாற்றிவிட்டார் போலும். எந்த நாட்டிடம் இருந்து, எத்தனை பேரல் கச்சா எண்ணெய், எவ்வளவு நாட்களுக்கு வாங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு உத்தரவிடுகிறார் என்றால் இதன் பொருள் என்ன? இந்தியா பாஜக ஆட்சியில் பாதுகாப்பாக இல்லை என்பது தானே!

அமெரிக்காவுக்கு அடிமையாக இருப்பது பாஜககாரர்களுக்கு பெருமையாக இருக்கலாம். ஆனால் இந்தியர்களுக்கு பெருத்த அவமானம். வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்துவோம்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News