தமிழ்நாடு செய்திகள்

மசினகுடியில் கரடிகள் நடமாட்டம் அதிகரிப்பு- சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

Published On 2026-03-06 17:26 IST   |   Update On 2026-03-06 17:30:00 IST
  • மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்தாக மாறக்கூடும் என எச்சரிக்கை.
  • வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் மசினகுடி மற்றும் மாயார் பகுதிகளில் இலந்தை பழ சீசன் தொடங்கியுள்ளதால், கரடிகள் சாலையோர மரங்களில் ஏறி பழங்களை உண்ணும் காட்சிகள் அடிக்கடி காணப்பட்டு வருகின்றன.

முதுமலை புலிகள் காப்பகம் அருகிலுள்ள வனப்பகுதிகளில் உள்ள இலந்தை மரங்களில் பழங்கள் பழுத்து வரும் நிலையில், அவற்றை உண்பதற்காக கரடிகள் அதிக அளவில் அப்பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக அதிகாலை மற்றும் பகல் நேரங்களில் கரடிகள் மரங்களில் ஏறி இலந்தை பழங்களை உண்டு செல்லும் காட்சிகள் சாலையோரங்களில் தென்படுகின்றன.

இதனால் மசினகுடி – மாயார் சாலையில் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பலர் கரடிகளை வேடிக்கை பார்க்கவும், புகைப்படம் மற்றும் காணொளி எடுக்கவும் வாகனங்களை நிறுத்தி பார்க்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இது ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கக்கூடும் என்பதால் வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கரடிகள் எந்த நேரத்திலும் சாலையை கடந்து செல்லக்கூடும் என்பதால், வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சாலையோரங்களில் கரடிகள் காணப்பட்டால், வாகனங்களை நிறுத்தி அருகில் சென்று பார்க்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என்றும், இடையூறு ஏற்படுத்தாமல் உடனே அந்த இடத்தை கடந்து செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் கரடிகளுக்கு அருகில் சென்று தொந்தரவு செய்தால் அல்லது வாகனங்களை நிறுத்தி கூட்டம் உருவாக்கினால், அது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்தாக மாறக்கூடும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் எச்சரிக்கையை மீறி விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News