தமிழ்நாடு செய்திகள்

எந்த கட்சியையும் நான் கூட்டணிக்கு அழைக்கவில்லை- எடப்பாடி பழனிசாமி

Published On 2025-08-08 13:56 IST   |   Update On 2025-08-08 13:56:00 IST
  • கடந்த தேர்தலின் போது செய்ய முடியாத சில திட்டங்களை சொல்லி தி.மு.க. ஆட்சிக்கு வந்து விட்டது.
  • அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து இருப்பதால் தி.மு.க. மிகவும் பயந்து போய் உள்ளது.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முதல் கட்ட பிரசாரத்தை முடித்து உள்ளேன். நான் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் அலை அலையாக திரண்டு வந்து ஆதரவு கொடுத்தனர். இதை பார்க்கும் போது தமிழக மக்கள் ஆட்சி மாற்றம் என்பதில் தெளிவாக இருப்பது உறுதியாகி இருக்கிறது.

அது மட்டுமல்ல அந்த அரசியல் மாற்றத்தை அ.தி.மு.க.வால் மட்டுமே ஏற்படுத்த முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள். "காலத்தே பயிர் செய்" என்று சொல்வார்கள். நான் விவசாயி என்பதால் 8 மாதத்துக்கு முன்பே சரியான நேரத்தில் முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கி இருக்கிறேன்.

இது அ.தி.மு.க.வின் வெற்றியை உறுதி செய்யும். தாமதமாகி விட்டால் 234 தொகுதிகளுக்கும் செல்ல இயலாது. எனவேதான் இப்போதே மக்களை சந்தித்து வருகிறேன்.

கடந்த தேர்தலின் போது செய்ய முடியாத சில திட்டங்களை சொல்லி தி.மு.க. ஆட்சிக்கு வந்து விட்டது. நாங்கள் நிறைவேற்ற முடியாததை பொய்யான வாக்குறுதிகளாக சொல்ல மாட்டோம். இருக்கிற நிதியை வைத்துக் கொண்டு மக்களுக்கு தேவையானதை செய்து கொடுப்போம்.

தி.மு.க. தனது 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும் போது தமிழகத்தின் மொத்த கடன் ரூ.5.38 லட்சம் கோடியாக உயர்ந்து விடும். இதை எப்படி திருப்பி கொடுப்பது? திறமை இல்லாத அரசால்தான் தற்போது இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது.

அதுமட்டுமல்ல கடந்த 50 மாதங்களில் தி.மு.க. ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்து விட்டன. போதை பழக்கம் இளைஞர்களிடம், மாணவர்களிடம் அதிகமாகி இருக்கிறது. பெண்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியவில்லை. மற்ற மாநிலங்களில் இருந்து ரவுடிகள் தமிழகத்துக்குள் வந்து உள்ளனர்.

அவர்கள் போலீசுக்கு பயப்படாமல் குற்றங்களை செய்கிறார்கள். இதனால் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது. ரவுடிகளை கண்டு போலீஸ்காரர்களே பயப்படும் நிலை உள்ளது. இதற்கு எல்லாம் நாங்கள் முடிவு கட்டுவோம்.

சட்டசபை ஒவ்வொரு தடவை கூடும்போதும் போதைப் பொருள் பழக்கம் கிராமம் முதல் நகரம் வரை பரவி விட்டதை நான் சுட்டி காட்டி வருகிறேன். ஆனால் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க தவறி விட்டது.

அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து இருப்பதால் தி.மு.க. மிகவும் பயந்து போய் உள்ளது. இதனால் தான் பா.ஜ.க. ஆட்சியில் பங்கு கேட்பதாக தி.மு.க.வினர் திட்டமிட்டு வதந்தி பரப்பினார்கள். இதையும் மீறி அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் நிச்சயமாக ஆட்சி அமைக்கும்.

210 தொகுதிகளில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். மக்கள் எங்களுக்கு தெரிவிக்கும் ஆதரவை பார்த்து தான் இதை நான் சொல்கிறேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்து இவ்வளவு நாட்கள் ஆகியும் 10 சதவீத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை.

பணத்தையும், ஆட்களையும் வைத்து 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் மக்கள் அவர்களை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்புவார்கள்.

சிறுபான்மை மக்களை வாக்கு வங்கிகளாக தி.மு.க. பயன்படுத்தி வருகிறது. ஆனால் அ.தி.மு.க. ஒருபோதும் அப்படி நடந்து கொள்ளாது. நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாகவே இருப்போம்.

தி.மு.க.வை 2026-ம் ஆண்டு தேர்தலில் தோற்கடிக்க ஒருமித்த கருத்து உள்ள கட்சிகள் அனைத்தும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வரவேண்டும் என்று முன்பு நான் கூறினேன். அதை பல கட்சிகள் நிராகரித்து விட்டதாக தகவல்கள் பரப்பப்பட்டன. நான் என்ன சொன்னேன் என்பதை புரிந்து கொள்ளவில்லை.

நான் எந்த கட்சி பெயரையும் குறிப்பிடவில்லை. யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு அ.தி.மு.க. கூட்டணிக்கு வாருங்கள் என்று அழைக்கவும் இல்லை. 2026-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் இருக்கும் கட்சிகள் எங்களுடன் சேர்ந்து திரள வேண்டும் என்றுதான் கூறினேன்.

கடந்த 50 ஆண்டுகளாக மக்களுக்கு பல்வேறு நலத் திட்டப் பணிகளை அ.தி.மு.க. செய்து கொடுத்து உள்ளது. இதனால் மக்கள் மனதில் இடம் பிடித்து அ.தி.மு.க. தனித்துவத்துடன் செல்வாக்கு மிக்க கட்சியாக திகழ்கிறது. என்றாலும் அரசியலில் வலுவான கூட்டணியும், பணப்பலமும் உள்ள தி.மு.க.வை தோற்கடிக்க அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அவசியம் என்பதை வலியுறுத்தி வருகிறேன்.

அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமைய வேண்டும் என்று நான் தெரிவித்ததை பல கட்சிகள் ஏற்றுக்கொண்டு உள்ளன. அந்த கட்சிகள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. எனவே வலுவான ஒரு கூட்டணி அமையும் என்று நம்புகிறேன்.

அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்றதை பல முறை நிரூபித்து இருக்கிறது. ஆனால் தி.மு.க. பணத்தை வீசி சில கட்சிகளை அடிமையாக வைத்து தேர்தலில் வெற்றி பெற்று உள்ளது. தி.மு.க. தனித்து போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேளுங்கள். அதன் பிறகு நான் பதில் சொல்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Tags:    

Similar News