அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பயம்: இ.பி.எஸ்.
- 98 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பச்சை பொய் கூறுகிறார்.
- விலையேற்றத்தை கட்டுப்படுத்த திறமையில்லாத அரசு தி.மு.க. அரசு.
ஈரோடு:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி 5-வது கட்ட தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கி உள்ள அவர் நேற்று ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி மற்றும் வில்லசரம்பட்டியில் பிரசாரம் செய்தார்.
மொடக்குறிச்சி தொகுதிக்கான கூட்டம் அவல்பூந்துறை அருகே உள்ள சோளிபாளையம் பகுதியில் நடந்தது. இதற்கு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி முன்னிலை வகித்தார்.
திரண்டிருந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசார பஸ்சில் நின்றவாறு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5-ம் ஆண்டு நடந்து வருகிறது. இந்த 4 ஆண்டுகளில் மொடக்குறிச்சி தொகுதியில் ஏதாவது திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதா? எதுவும் இல்லை. கடந்த தேர்தலின் போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 520 அறிவிப்புகள் அறிவித்தது. அதில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. ஆனால் முதலமைச்சர் திட்டமிட்டு பொய்யை பரப்பி வருகிறார்.
98 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பச்சை பொய் கூறுகிறார். தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றார். உயர்த்தினார்களா?. 100 நாள் தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் என்றார்கள். உயர்த்தினார்களா?. அதுவும் இல்லை. ஏற்கனவே பணி செய்த நாட்களுக்கு முழுமையான சம்பளம் வழங்க முடியாத அவல நிலை இன்றைய தினம் தொடர்கிறது.
ஆனால், இந்த பணியாளர்களுக்காக அ.தி.மு.க. மத்திய அரசில் சம்பந்தப்பட்ட மந்திரியிடம் எடுத்துக்கூறி சம்பளம் முழுமையாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததன் பேரில் முதல்கட்டமாக ரூ.2 ஆயிரத்து 999 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உணவு பொருட்களின் விலை விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. அரிசி விலை உயர்ந்து விட்டது.
தமிழகத்தில் 65 சதவீதம் பேர் சாதாரண ஏழை மக்கள். விலை உயர்வால் இவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
பச்சரிசி கிலோ ரூ.50-ல் இருந்து ரூ.77 ஆக உயர்ந்துள்ளது. பொன்னி அரிசி ரூ.50-ல் இருந்து ரூ.72 ஆக உயர்ந்துள்ளது. இட்லி புழுங்கல் அரிசி ரூ.30 என்பது ரூ.48-க்கு உயர்ந்துள்ளது.
கடலை எண்ணெய் ஒரு லிட்டர் ரூ.130-ல் இருந்து ரூ.190 ஆகவும், நல்லெண்ணெய் ரூ.250-ல் இருந்து ரூ.400-க்கும், துவரம் பருப்பு ரூ.74-ல் இருந்து ரூ.130-க்கும், உளுந்தம்பருப்பு ரூ.79-ல் இருந்து ரூ.120-க்கும் உயர்ந்துள்ளது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
அ.தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்வை தடுக்க கட்டுப்பாட்டு நிதி என்ற பெயரில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து கூட்டுறவுத்துறை மூலம் பொருட்கள் வாங்கி மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கினோம்.
எனவே விலையேற்றத்தை தடுத்து நிறுத்தியது அ.தி.மு.க. அரசு. விலையேற்றத்தை கட்டுப்படுத்த திறமையில்லாத அரசு தி.மு.க. அரசு. ஓட்டு போட்ட மக்களுக்கு துரோகம் செய்யும் அரசு. விடியா தி.மு.க. அரசு.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் தமிழகத்தில் போதைப்பொருட்கள் விற்பனை தடையின்றி நடந்து கொண்டு இருக்கிறது. மாணவர்கள், பொதுமக்கள் போதைக்கு அடிமையாகி சீரழிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சீரழிவுக்கு தி.மு.க. அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். திறமையற்ற முதலமைச்சர், பொம்மை முதலமைச்சர். என்ன செய்வதென்றே அறியாமல் ஆட்சி நடத்திவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டிலேயே கஞ்சா விற்பனை குறித்து எச்சரித்தோம். பிரதான எதிர்க்கட்சி சொல்வதை கேட்டு நடவடிக்கை எடுத்திருந்தால் தமிழகத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி இருக்கலாம்.
அதை கேட்காததால் இன்று இந்தியாவிலேயே அதிகமாக போதைப்பொருட்கள் நடமாடும் மாநிலமாக தமிழகம் உருவாகிவிட்டது.
எல்லா துறைகளிலும் ஊழல். ஊழல் இல்லாத துறைகளே இல்லை. தி.மு.க. என்றால் ஊழல். ஊழல் என்றால் தி.மு.க. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஊழலுக்காக ஆட்சி கலைக்கப்பட்ட வரலாறு கிடையாது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு தி.மு.க. அரசு.
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. பாட்டிலுக்கு ரூ.10 என்றால் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரத்து 500 கோடி. 4 ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. இதை மறுக்க முடியுமா?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு அவதூறுகளை பரப்புகிறார். நீங்கள் எங்கள் அ.தி.மு.க. ஆட்சி குறித்து பேசுங்கள் பதில் சொல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமுமில்லை. ஆனால், மு.க.ஸ்டாலிலுக்கு பயம் வந்துவிட்டது. எப்போது பா.ஜ.க. கட்சியுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்ததோ அப்போதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது.
இது எங்கள் கட்சி. நாங்கள் யாருடனும் கூட்டணி வைப்போம். நீங்கள் ஏன் பதறுகிறீர்கள். உங்களுக்கு ஏன் கவலை. அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். தி.மு.க. கூட்டணியில் நிறைய கட்சிகள் இருப்பதாக கூறுகிறார்கள். இருந்துவிட்டு போகட்டும். ஓட்டுபோடுவது கூட்டணி அல்ல. மக்கள் தான். மக்கள் தான் நீதிபதி. மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்கள் தான் ஆட்சிக்கு வரமுடியும். அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் குடிமராமத்து திட்டம் நிறைவேற்றப்படும். விவசாயிகளுக்கு 24 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். ஏழை பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படும்.
அருந்ததியர், பட்டியலினத்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். நெசவாளர்களுக்கு இலவச வீடு கட்டித்தரப்படும். கட்சிக்கு உழைக்கிறவர்கள் உயர்பதவிக்கு வரக்கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க. ஆனால் தி.மு.க. குடும்ப கட்சி. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் 2026 சட்டமன்ற தேர்தல்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வில்லரசம்பட்டியில் பிரசாரம் செய்தார்.