தமிழ்நாடு செய்திகள்

செல்வப்பெருந்தகை, காங்கிரசுக்கு விசுவாசமாக இல்லை- எடப்பாடி பழனிசாமி தாக்கு

Published On 2025-09-24 13:56 IST   |   Update On 2025-09-24 13:57:00 IST
  • தி.மு.க.வில் உள்ள அனைத்து பதவிகளையும் கருணாநிதி குடும்பத்தினரே அனுபவிக்கின்றனர்.
  • காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஒரு கருத்தை சொல்ல, அதற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் அழகிரி ஒரு கருத்தை சொல்கிறார்.

ஊட்டி:

'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று 2-வது நாளாக நீலகிரி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.

கூடலூர் பஸ் நிலையம் அருகே இன்று திரண்டு இருந்த பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

இந்தியாவிலேயே கல்வியில் தமிழகம் முதல் இடம் பிடிப்பதற்கு அ.தி.மு.க. தான் காரணம். அ.தி.மு.க ஆட்சியில் ஏராளமான கல்லூரிகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கையை 54 சதவீதமாக உயர்த்தியது அ.தி.மு.க அரசு தான். கல்விக்கு அதிக நிதி ஒதுக்கி, கல்வியில் புரட்சி செய்தது அ.தி.மு.க.

தி.மு.க. 4 ஆண்டு ஆட்சியில் ஒரு அரசு மருத்துவக்கல்லூரியாவது கொண்டு வரப்பட்டதா? மத்திய அரசு கொடுக்கவில்லை என்பார்கள். ஆனால் அது தவறு. ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தோம்.

நேற்று உதயநிதி ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் பேசும்போது, நாட்டிலேயே ரோல் மாடல் ஆட்சி செய்வது ஸ்டாலின் என்கிறார். அப்படியா செய்து கொண்டிருக்கிறார். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவதில் முதல் ரோல் மாடல் தான் ஸ்டாலினின் அரசு. கமிஷன், ஊழலில் ரோல்மாடல் தி.மு.க., குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல் மற்றும் ஸ்டிக்கர் ஓட்டி திறப்பதில் ரோல் மாடல் தி.மு.க தான்.

எதிர்கட்சி தலைவராக இருந்தபோது ஸ்டாலின் 525 வாக்குறுதிகளை கொடுத்தார். அதில் 98 சதவீதம் நிறைவேற்றியதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அத்தனையும் பொய். அதிலும் நீங்கள் ரோல் மாடல் தான். போட்டோ சூட் நடத்துவதிலும் நீங்கள் தான் ரோல் மாடல்.

கூட்டணி கட்சிகள் தொடர்ந்து தி.முக.வோடு அங்கம் வகிப்பதாக அவர்கள் கூறி வருகின்றனர். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஒரு கருத்தை சொல்ல, அதற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் அழகிரி ஒரு கருத்தை சொல்கிறார். சாறை முழுவதுமாக குடித்து விட்டு சக்கையை வழங்குகிறார்கள் என தெரிவித்து இருந்தார்.

உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலினையும், ஸ்டாலின் உதயநிதியையும் புகழ்ந்து பேசுகிறார்கள். இவர்கள் போதாது என்று இப்போது துர்கா ஸ்டாலினும் வந்து விட்டார். அவரும் ஸ்டாலினை புகழ்கிறார். இவர்களை நாட்டு மக்கள் புகழ்ந்து பேசவில்லை. குடும்ப மக்கள் தான் அவர்களை புகழ்ந்து பேசிக் கொள்கின்றனர்.

தி.மு.க.வில் உள்ள அனைத்து பதவிகளையும் கருணாநிதி குடும்பத்தினரே அனுபவிக்கின்றனர். தி.மு.க. குடும்ப கட்சி. கருணாநிதி குடும்பம் இருக்கும் வரை தி.மு.க.வில் யாரும் உயர்ந்த பதவிக்கு வர முடியாது. உழைப்பை சுரண்டும் குடும்பம் ஸ்டாலின் குடும்பம்.

நாட்டில் உள்ள எந்த கட்சியாலாவது இப்படி குடும்ப ஆட்சி நடப்பதை பார்க்க முடிகிறதா? கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி தி.மு.க.வில் கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் வரமுடியும். இப்படிப்பட்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? ஒரு குடும்பம் 8 கோடி மக்களை சுரண்டி பிழைப்பதற்கு நாம் அனுமதிக்கலாமா? இதற்கு ஒரு முடிவு கட்டுவிங்களா? என மக்களை பார்த்து கேட்டார்.

செல்வப்பெருந்தகை பல கட்சியில் இருந்து வந்தவர். இவர் பல கட்சிகளுக்கு போய்விட்டு வந்து விட்டார். காங்கிரஸ் கட்சியில் உள்ள மற்ற தலைவர்கள் ஆட்சியில் பங்கு கேட்டு பேசி வருகின்றனர். ஆனால் இவர் சொல்கிறார் ராகுல்காந்தி ஆட்சியில் பங்கு கேட்க சொல்லவில்லை என சொல்கிறார். உண்மையில் ஒரு காங்கிரஸ் தொண்டனாக இருந்திருந்தால் அந்த எண்ணம் இவருக்கு வந்திருக்குமா?. அவர் தி.மு.க.வை தாங்கி பிடித்து கொண்டிருக்கிறார். அவர் காங்கிரஸ் கட்சியை வளர்க்க பார்க்கவில்லை.

செல்வப்பெருந்தகை காங்கிரசுக்கு விசுவாசமாக இல்லை. தி.மு.க.வுக்கு தான் விசுவாசமாக உள்ளார்.

தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியில் பிளவு வந்துவிட்டது. ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் தி.மு.க கூட்டணி நிலையான கூட்டணியாக உள்ளது. ஆனால் அ.தி.மு.க அடிக்கடி கூட்டணி மாறுவதாக சொல்கிறார்கள்.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை எப்போதும் கூட்டணியை நம்பி இருந்தது இல்லை. ஆனால் தி.மு.க எப்போதும். கூட்டணியை நம்பி தான் இருக்கிறது. மக்கள் எங்களோடு கூட்டணி வைத்துள்ளார்கள். 2026 தேர்தலில் அ.தி.மு.க வெல்லும். ஆட்சிக்கு வரும். அதனை ஸ்டாலின் பார்க்க தான் போகிறார்.

மக்களின் எழுச்சியே எங்களது ஆட்சி வருவதற்கான அடையாளம். தேர்தலில் அ.தி.முக. தான் முதலிடத்தில் உள்ளது. 2-வது இடத்துக்கு தான் தற்போது மற்ற கட்சிகள் போட்டி போட்டு கொண்டிருக்கின்றன.

அ.தி.மு.க. பா.ஜ.க.வின் அடிமை என ஸ்டாலின் பேசுகிறார். தலைவன் மட்டும் அல்ல தொண்டன் கூட யாருக்கும் அடிமை இல்லை. நாங்கள் சொந்த காலில் நிற்கிறோம்.

உங்களை போன்று கூட்டணியை நம்பி இல்லை. கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது வேறு. தேர்தல் நேரத்தில் வாக்குகள் சிதறாமல் இருக்க வேண்டும் என்பதற்கே கூட்டணி அமைக்கிறோம். உங்களை போன்று பல கட்சிகளை கூட்டணியில் வைத்து அவர்களை அடிமையாக்க நாங்கள் விரும்பவில்லை. எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் சுதந்திரமாக உள்ளனர்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரை தி.மு.க. தான் நியமிக்கிறது. தி.மு.க. யாரை பரிந்துரை செய்கிறதோ அவரை தான் காங்கிரஸ் மேலிடம் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கிறது. கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்யும் கட்சி தி.மு.க.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செ.ம.வேலு சாமி, மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News