தி.மு.க. அரசியல் எதிரி! - ஆனால்... முதல் மாநாட்டில் அ.தி.மு.க.வை பற்றி பேசாத விஜய்!
- திராவிடமும் தமிழ்த்தேசியமும் இரு கண்கள் என்பதுதான் எங்களது கொள்கை.
- மத அப்படையில் பிளவுப்படுத்தும் அரசியலை விரும்பவில்லை.
தமிழ்த்திரை உலகில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியின் முதல் மாநில அரசியல் மாநாடு நேற்று விழுப்புரம் வி.சாலையில் நடைபெற்றது. 101 அடி கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றிய விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளை விவரித்தார்.
திராவிடமும் தமிழ்த்தேசியமும் இரு கண்கள் என்பதுதான் எங்களது கொள்கை. தமிழ்நாட்டு உரிமைகளை சார்ந்த மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கையை நமது கொள்கை கோட்பாடாக முன்னிறுத்தி செயல்பட போகிறோம் எனக் கூறினார்.
மத அப்படையில் பிளவுப்படுத்தும் அரசியலை விரும்பவில்லை எனத் தெரிவித்தார். இதன்மூலம் தேசிய கட்சியான பா.ஜ.க.-வுக்கு நேர் எதிரான கட்சி என்பதை வெளிப்படையாக விளக்கிவிட்டார்.
2-வதாக அரசியல் எதிரி தி.மு.க. என்பதை தெளிவிப்படுத்தியுள்ளார். திராவிட அரசு என்ற பெயரில் தமிழக மக்களை ஏமாற்றுவதாக தி.மு.க.-வை நேரடியாக சாடினார். இதனால் அவருடைய முக்கியமான எதிரி தி.மு.க.தான் என்பது தெளிவாகிவிட்டது.
மாநாட்டின் இறுதியில் தனி மெஜாரிட்டி பெறுவதில் எந்த சந்தேகமும் இல்லை எனக் கூறினார். ஆனால், தம்முடன் வருபவர்களை அரவணைக்க வேண்டாமா... எனத் தெரிவித்து எங்களுடன் வந்தால் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு எனத் தெரிவித்துள்ளார்.
மத்தியில் கூட்டணி ஆட்சி, மாநிலங்களில் சுயாட்சி என்ற திராவிட கட்சிகளான திமுக, அதிமுக-வும் தங்களது கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்காத வகையில், தற்போது மற்ற சிறு கட்சிகளை குறிவைத்து இவ்வாறு பேசியிருக்கலாம் என்பது தெளிவாகிறது.
ஊழலை எதிர்த்து போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊழல் என்றால் தி.மு.க., அதிமுக அரசைத்தான் சொல்ல முடியும். 1967-ல் இருந்து இந்த இரண்டு கட்சிகள்தான் மாறிமாறி ஆட்சி செய்துள்ளன. இதில் தி.மு.க.-வை விட அ.தி.மு.க.தான் அதிக முறை ஆட்சி செய்துள்ளது. அதன் பொதுச் செயலாளர் ஊழல் வழக்கில் சிறை வரை சென்று வந்தவர். ஆனால் பெயர் சொல்லியோ, அதிமுக-வையோ அவர் ஊழல் பற்றி பேசும்போது காரசாரமாக ஏதும் பேசவில்லை.
ஆனால் தனது சுமார் 45 நிமிட பேச்சில், தன்னை கூத்தாடி எனக் கூறுகிறார்கள். எம்.ஜி.ஆர்., என்.டி.ராமராவ் ஆகியோரும் அந்த வழியில் வந்தவர்கள்தான் என்பதற்கு எம்.ஜி.ஆர். பெயரை பயன்படுத்தினார்.
அ.தி.மு.க.-வை அவர் ஏன் இழுக்கவில்லை என்பது அரசியல் விமர்சகர்களின் புருவத்தை உயர்த்தியுள்ளது. அதோடு மட்டுமல்ல அ.தி.மு.க.-வினருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நமக்கு ஆட்சியில் இருக்கும் தி.மு.க.தான் எதிரி. அதை மட்டுமே எதிர்த்தால் தி.மு.க. - த.வெ.க. ஆகியவற்றிற்கு இடையில்தான் போட்டி என்ற பிம்பத்தை ஏற்படுத்த அப்படி செய்திருக்கலாம் என உணரப்படுகிறது.
ஒருவேளை அ.தி.மு.க. விஜய் கட்சியுடனோ, த.வெ.க. , அ.தி.மு.க.-வுடனோ இசைவுடன் செல்லலாம் என எடுத்துக்கொள்ளலாமா என்றால், அ.தி.மு.க. பலமுறை ஆண்ட கட்சி., எனவே அந்த கட்சி ஒரு புதிய கட்சியின் கீழ் செல்லாது. இதனால் அ.தி.மு.க. உடன் இசைவுடன் செல்ல வாய்ப்பு இல்லை என உணர முடிகிறது.
இதனால் அ.தி.மு.க.-வை நமது போட்டி வளையத்தற்குள் இழுக்காமல் நேரடியாக தி.மு.க.-வை மட்டுமே குறிவைத்து விஜய் பேசியிருக்கலாம்...
எது எப்படியோ... விஜயின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் மூலம் அவரது கட்சி செல்லும் பாதை என்ன என்பது தெளிவாகும் என நம்புவோம்.