தமிழ்நாடு செய்திகள்

துணை ஜனாதிபதி வருகையையொட்டி திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு

Published On 2025-12-28 10:27 IST   |   Update On 2025-12-28 10:27:00 IST
  • விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை தீவிர சோதனை செய்த பிறகே அனுமதிக்கிறார்கள்.
  • விமான நிறுவனத்தினர் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது.

கே.கே.நகர்:

இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை (29-ந்தேதி, திங்கட்கிழமை) புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து ராணுவ விமானம் மூலமாக திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்று அங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

பின்னர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். இங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்லும் வகையில் அவரது பயண திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான முன்னேற்பாடு பணிகள் திருச்சி விமான நிலையத்தில் இயக்குனர் ராஜூ மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் திலீப் நம்பூதிரி ஆகியோர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் திருச்சி விமான நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை தீவிர சோதனை செய்த பிறகே அனுமதிக்கிறார்கள்.

அதற்கு அடுத்தபடியாக விமான நிலைய வாகன நிறுத்தம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தொடர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையத்தில் முனைய நுழைவு வாயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் பயணிகளின் உடமைகளை சோதனை செய்து வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து பயணிகளின் உடைமைகள் அதிநவீன ஸ்கேனர் கருவின் மூலம் ஸ்கேன் செய்யப்பட்ட பின்பு முனையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

விமான நிறுவனத்தினர் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாதுகாப்பானது நாளை மறுநாள் (30-ந்தேதி) வரை தொடரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் நேற்று முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று திருச்சி விமான நிலையத்திற்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வருகையை முன்னிட்டு ராணுவ விமானம் தரையிறங்கி ஒத்திகை நடத்தப்பட்டது. அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News