தமிழ்நாடு செய்திகள்

விஜயகாந்த் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை

Published On 2025-12-28 12:03 IST   |   Update On 2025-12-28 12:03:00 IST
  • தே.மு.தி.க. நினைவிடத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
  • இசை அமைப்பாளர் தீனா மற்றும் திரை பிரபலங்களும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் மரியாதை செலுத்தினார்கள்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் ஆலயம் நினைவிடத்தில் கேப்டனின் 2-ம் ஆண்டு குருபூஜை என்ற பெயரில் அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா கோயம்பேட்டில் உள்ள மாநிலத்தேர்தல் அலுவலகம் அருகில் இருந்து ஊர்வலமாக வந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தினார்.

இந்த ஊர்வலத்தில் தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, விஜயகாந்தின் மகன்களான தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், நடிகர் சண்முக பாண்டியன் ஆகியோர் கட்சி நிர்வாகிகளோடு ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த விஜயகாந்த் சிலைகளுக்கும் அவர் மாலை அணிவித்தார்.

தே.மு.தி.க. நினைவிடத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

விஜயகாந்த் நினைவிடத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், நடிகை கஸ்தூரி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்பட இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, பேரரசு, இசை அமைப்பாளர் தீனா மற்றும் திரை பிரபலங்களும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிலையில் விஜயகாந்த் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலையில் இருந்தே தே.மு.தி.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சி அலுவலகத்தில் திரண்டு இருந்தனர். அவர்களோடு பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று மரியாதை செலுத்தினார்கள்.

Tags:    

Similar News