தமிழ்நாடு செய்திகள்

பேச்சுவார்த்தை முடிந்த பின் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம்- அன்புமணி ராமதாஸ்

Published On 2025-12-27 09:51 IST   |   Update On 2025-12-27 09:51:00 IST
  • தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக வேளாண் துறை வளர்ச்சி என்று சொல்ல முடியாத அளவிற்கு மைனசில் உள்ளது.
  • தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மதுரை:

மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அன்புமணி ராமதாஸ் சென்னையிலிருந்து விமான மூலம் இன்று காலை மதுரை வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் அன்றாடம் பல வகையான போராட்டங்கள் தி.மு.க. அரசை எதிர்த்து நடைபெறுகிறது. ஒரு பக்கம் ஆசிரியர்கள், இளநிலை உதவி பேராசிரியர்கள், துப்புரவு பணியாளர்கள், அரசு ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் போராடி வருகிறார்கள்.

பெண்கள் மதுக்கடைகளுக்கு எதிராக ஒரு பக்கம் போராடுகிறார்கள். இப்படி தமிழ்நாட்டில் விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க. அரசை எதிர்த்து போராடி வருகிறார்கள். தி.மு.க. மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். அனைவரும் தி.மு.க.வுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்திருக்கிறார்கள். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையும்.

தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக வேளாண் துறை வளர்ச்சி என்று சொல்ல முடியாத அளவிற்கு மைனசில் உள்ளது. கடந்தாண்டு மைனஸ் 3.8 சதவீதம். இந்த ஆண்டு மைனஸ் 1.8 சதவீதம். எந்த ஆட்சியிலும் இப்படி இருந்தது இல்லை. கடந்த ஆண்டு உழவர்களின் பயிர் இழப்பீடு தொகை இன்னும் கிடைக்கவில்லை. தமிழகத்தில் நிர்வாகம் என்று எதுவும் இல்லை. முதல்வருக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் கடனை மட்டும் அதிகமாக வாங்கி இருக்கிறார்கள். தமிழகத்திற்கு ரூ.9 லட்சத்து 55 ஆயிரம் கோடி கடன் உள்ளது. இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு தான். வட்டி மட்டும் ரூ.62 ஆயிரம் கோடி கட்டுகிறார்கள்.

தென்மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் கனிம வள கொள்ளை குறித்து நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். இதற்கு காட்பாதராக தென் மாவட்டத்தை சேர்ந்த ஒரு முக்கிய புள்ளி இருக்கிறார். மேற்கு தொடர்ச்சி மலை நமக்கு ஒரு வரம். அந்த மழையை அழித்தொழித்து நாசப்படுத்த வேண்டும் என்று முடிவில இருக்கிறார்கள். உறுதியாக கனிமவள கொள்ளை குறித்து சி.பி.ஐ. விசாரணை வரும். அதில் மாற்றுக் கருத்து இல்லை.

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 365 சமுதாயங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். பயன்பெறாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும். இதை யெல்லாம் கணக்கெடுப்பு நடத்தினால் மட்டும் தான் தெரியும். அதைக்கூட நடத்த மாட்டேன் என்று சொல்லும் முதலமைச்சரை பார்த்திருக்கீங்களா?. அவர் தான் மு.க.ஸ்டாலின்.

ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒரிசா, பீகார் என அனைத்து மாநிலங்களிலும் சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்து உள்ளார்கள். அங்கு சமூக நீதியை நிலைநாட்டும் அரசு உள்ளது. தமிழ்நாட்டில் சமூக அநீதி தான் உள்ளது. இவர்கள் பெரியாரின் பெயரை சொல்ல தகுதி இல்லாதவர்கள்.

சாதிவாதி கணக்கெடுப்பு நடத்த மு.க.ஸ்டாலின் எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று பொய் சொல்கிறார். கணக்கெடுப்பு நடத்த என்ன பிரச்சனை.

தமிழகத்தில் தொழில் முதலீடு வந்து விட்டதாக பொய்யான தகவலை தி.மு.க. அரசு பரப்பி வருகிறது. நான் அது தொடர்பாக ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறேன். 34 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கிறது. ரூ.11 லட்சத்து 32 ஆயிரம் கோடி கிடைத்து உள்ளது என்று பொய்யை முதலமைச்சர் சொல்லி வந்தார். தற்போது புத்தகம் போட்டவுடன் வாயை திறக்கவில்லை. 8.8 சதவீதம் தான் தொழில் முதலீடு வந்துள்ளது. ரூ.ஒரு லட்சத்து 56 ஆயிரம் கோடிக்கு தான் ஒப்புதல் கொடுத்து உள்ளார்கள். ஆனால் தி.மு.க.வினர் பொய் சொல்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்.

தேர்தல் பேச்சுவார்த்தை முடிந்த பின் விரைவில் எங்கள் கூட்டணி குறிடித்து அறிவிப்போம். எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியடையும். இன்று கூட்டணி குறித்து எதுவும் என்னால் பேச முடியாது. ஆனால் நிச்சயமாக பெரிய கூட்டணி முடிவாகும்.

ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது இதுதான் எனது நிலைப்பாடு. நீதிமன்ற தீர்ப்பை அரசு மதிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்று கூறினார். 

Tags:    

Similar News