தமிழ்நாடு செய்திகள்

ஆட்சியில் பங்கு இல்லை என்று திட்டவட்ட அறிவிப்பு- கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன?

Published On 2026-02-11 13:57 IST   |   Update On 2026-02-11 13:57:00 IST
  • கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்பதில் காங்கிரஸ் தலைமை உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
  • அரசியலுக்கு அப்பாற்பட்டு ராகுல்காந்தியும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் சகோதரர்களாக பழகுகிறார்கள்.

சென்னை:

தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியினர் இந்த முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க.-காங்கிரஸ் தலைமை பலமுறை சந்தித்து பேசியுள்ளது. ஆனால் இதுவரை எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு அமைத்த பிறகு பேசலாம் என்று தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்த குழுவை உடனே அமைக்குமாறு காங்கிரஸ் மேலிடம் வலியுறுத்தியது. ஆனால் தி.மு.க.வில் இன்னும் தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்படவில்லை. காங்கிரஸ் தலைமை வற்புறுத்தி 70 நாட்கள் ஆகியும் குழு அமைக்கப்படவில்லை. இது காங்கிரஸ் தலைவர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் நேற்று பேட்டி அளித்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், "நாங்கள் தி.மு.க.வில் பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர்கள் என்று 70 நாட்களாக காத்திருக்கிறோம். அவர்கள் குழு அமைக்காதது வேதனை அளிக்கிறது" என்று கூறினார்.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்லப்பெருந்தகை கூறுகையில், "ஒவ்வொரு முறையும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தொகுதி பங்கீட்டு குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்துவது காங்கிரசுக்கு தர்மசங்கடமாக உள்ளது. ஏற்கனவே பீகார், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல்களில் இந்த தர்ம சங்கடத்தை அனுபவித்து உள்ளோம்.

எனவேதான் தமிழ்நாட்டில் பேச்சுவார்த்தை குழுவை உடனே அமைக்க வேண்டும் என்று தி.மு.க.விடம் வலியுறுத்தினோம். குழு அமைப்பார்கள் என்றும் எதிர்பார்த்தோம். ஆனால் குழு அமைக்காதது வேதனை அளிக்கிறது.

காங்கிரஸ் கட்சி தலைமை என்னிடம் சில கருத்துக்களை சொல்லி உள்ளது. அந்த கருத்துக்களை முதலமைச்சரை பார்த்து தெரிவிக்க இருக்கிறேன்" என்று கூறினார்.

அது என்ன கருத்துக்கள் என்று அவரிடம் கேட்டதற்கு, "அதுபற்றி வெளியே சொல்ல முடியாது" என்றார்.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அளித்துள்ள பேட்டியில், "தமிழக சட்டசபை தேர்தலை தி.மு.க.வும், காங்கிரசும் இணைந்துதான் சந்திக்கும். ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது. அது எங்களுக்கும் தெரியும். காங்கிரசுக்கும் தெரியும். சட்டசபையில் முறிவை ஏற்படுத்த முடியுமா? என்பதற்காக சிலர் சதி செய்கிறார்கள். அரசியலை தாண்டி ராகுல் காந்தி எனது சகோதரர் போன்றவர்" என்று கூறி உள்ளார்.

இதன் மூலம் தமிழகத்தில் ஆட்சியில் பங்கு இல்லை என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஆட்சியில் பங்கு என்கிற விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தலைமை எடுக்கப்போகும் முடிவு என்ன என்பதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்பதில் காங்கிரஸ் தலைமை உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே காங்கிரஸ் கட்சி என்ன முடிவு எடுக்கப்போகிறது என்று கேள்விக்குறி எழுந்து உள்ளது.

இதற்கிடையே ஆட்சியில் பங்கு இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பது பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்து உள்ளார்.

முதலமைச்சரின் கருத்தால் தி.மு.க. கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பிரச்சனை ஏற்படாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும், எதிர்பார்ப்பு இருக்கும். அதை கூறுவது ஜனநாயகம். கட்சியின் தலைவர் என்ற முறையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து கூறி உள்ளார்.

அவர் சொன்னது அவரது கருத்து. தி.மு.க.வின் கருத்து. தமிழ்நாட்டில் என்ன நிலை என்பதை முதலமைச்சர் கூறி உள்ளார். இதனால் கூட்டணிக்குள் பிரச்சனை இருக்காது.

ஆட்சியில் பங்கு என்பது தொடர்பாக காங்கிரஸ் தலைமை முடிவு எடுக்கும். தமிழ்நாட்டு நலனுக்கும், 2 கட்சிகளுக்கும் எது நலனோ அதை கட்சித் தலைவர்கள் பேசுவார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி ஆகியோர் கலந்து பேசி முடிவை எடுப்பார்கள்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு ராகுல்காந்தியும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் சகோதரர்களாக பழகுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News