தமிழ்நாடு செய்திகள்

கேரளாவில் நாளை ஸ்டிரைக்- ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு

Published On 2026-02-11 12:35 IST   |   Update On 2026-02-11 12:35:00 IST
  • கேரளாவில் ஓணம் பண்டிகை உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்களில் ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடைபெறும்.
  • தற்போது ஸ்டிரைக் காரணமாக வியாபாரிகள் முன்கூட்டியே தங்களுக்கு காய்கறிகள் அனுப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

ஒட்டன்சத்திரம்:

தென் தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தையாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் திகழ்ந்து வருகிறது. சுற்றுவட்டார கிராமங்களான அத்திக்கோம்பை, கள்ளி மந்தயம், அம்பிளிக்கை, தங்கச்சியம்மாபட்டி, புதுச்சத்திரம், விருப்பாச்சி, லக்கையன்கோட்டை பகுதிகளில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் மார்க்கெட்டுக்கு கொண்டு வருகின்றனர். இங்கிருந்து தமிழகத்தில் பிற மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக கேரளாவின் 65 சதவீத காய்கறி தேவையை ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பூர்த்தி செய்கிறது.

இந்த நிலையில் நாளை மத்திய அரசின் புதிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஸ்டிரைக் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வாகனங்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வியாபாரிகள் தங்களுக்கு காய்கறிகளை அனுப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர். தினசரி 100க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. சுமார் ரூ.2 கோடி அளவில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. கேரளாவில் ஓணம் பண்டிகை உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்களில் ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடைபெறும்.

தற்போது ஸ்டிரைக் காரணமாக வியாபாரிகள் முன்கூட்டியே தங்களுக்கு காய்கறிகள் அனுப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளனர். இதனால் வியாபாரிகளும் மார்க்கெட்டுக்கு வரவில்லை. இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் வெறிச்சோடியது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், கேரளாவில் நாளை வேலை நிறுத்த போராட்டத்தால் காய்கறிகள் அனுப்ப வேண்டாம் என அம்மாநில வியாபாரிகள் கூறி உள்ளனர். ஒட்டன்சத்திரத்தில் இருந்து அதிக அளவில் கேரளாவுக்கு காய்கறிகள் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் மார்க்கெட்டில் சுமார் ரூ.2 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர். 

Tags:    

Similar News