தமிழ்நாடு செய்திகள்

ஆட்டோ, டாக்சி கட்டணத்தை 12 ஆண்டுகளாக உயர்த்தாதது ஏன்?- அன்புமணி கேள்வி

Published On 2025-11-15 11:05 IST   |   Update On 2025-11-15 11:05:00 IST
  • செலவுக்கு ஏற்ற வருவாய் இல்லாததால் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் தினமும் 15 மணி நேரம் உழைக்க வேண்டியுள்ளது.
  • ஏழை ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் தொடர்புடைய ஆட்டோ கட்டணத்தை மட்டும் உயர்த்த மறுப்பது ஏன்?

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் நகரப்பகுதிகளில் இயக்கப்படும் ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகள் உள்ளிட்ட வாடகை ஊர்திகளுக்கான கட்டணம் கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி உயர்த்தப்பட்டன. அதன்படி ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டணமாக 1.8 கி.மீக்கு 25 ரூபாயும், அதன் பின்னர் ஒரு கிலோ மீட்டருக்கு 12 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் 12 ஆண்டுகள் நிறைவடைந்து 13-ம் ஆண்டு நடைபெற்று வரும் நிலையில், இன்று வரை கட்டணம் உயர்த்தப்படவில்லை.

கடைசியாக கட்டணம் உயர்த்தப்பட்ட நாளில் இருந்து இன்று வரை பெட்ரோல், டீசல் விலை இரு மடங்காக உயர்ந்து விட்டது; காப்பீடு, உரிமம் உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்கள் கணிசமாக அதிகரித்து விட்டன. வாகனங்களின் வயர்கள், பேட்டரிகள் உள்ளிட்ட உதிரிபாகங்களின் விலைகள் 2 முதல் 3 மடங்கு அதிகரித்து விட்டன. இதனால் ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகளை இயக்குவதற்கான செலவுகள் அதிகரித்து விட்டன. ஆனால், அதற்கு இணையாக வாகன வாடகை உயர்த்தப்படாததால், அவற்றை வாடகைக்கு எடுத்து ஓட்டி வரும் ஏழை ஓட்டுனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டுள்ளது.

செலவுக்கு ஏற்ற வருவாய் இல்லாததால் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் தினமும் 15 மணி நேரம் உழைக்க வேண்டியுள்ளது.

எரிபொருள் விலை உயர்வு, பிற கட்டணங்களின் உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆட்டோக்களின் குறைந்தபட்சக் கட்டணத்தை ரூ.50 ஆகவும், அதன்பின், ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 வீதமும் வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுனர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகின்றனர்.

இதுவரை 10 மாதங்களாகிவிட்டன. சட்டப்பேரவைக் கூட்டங்கள், அமைச்சரவைக் கூட்டங்கள், அரசு விழாக்கள் என பல தருணங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்தித்துள்ளார். ஆனால், வாடகை ஊர்திக் கட்டணங்கள் மட்டும் இன்னும் உயரவில்லை; ஓட்டுனர்கள் துயரமும் தீரவில்லை.

ஏழை ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் தொடர்புடைய ஆட்டோ கட்டணத்தை மட்டும் உயர்த்த மறுப்பது ஏன்?

இனியாவது இந்தப் போக்கை கைவிட்டு, மக்களை பாதிக்காத வகையில் ஆட்டோ-டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

Tags:    

Similar News