தமிழ்நாடு செய்திகள்

துணை முதலமைச்சர் பதவியை விஜய்க்கு வழங்க அ.தி.மு.க. சம்மதம்?- திரைமறைவு பேச்சுவார்த்தை தீவிரம்

Published On 2025-06-22 13:54 IST   |   Update On 2025-06-22 13:54:00 IST
  • தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிக்கு எதிரான மனநிலையில் உள்ள அனைத்து கட்சிகளையும் அ.தி.மு.க. அணியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
  • அ.தி.மு.க. கூட்டணியை விரைவாக வலுப்படுத்திவிட வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் எண்ணமாக உள்ளது.

சென்னை:

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக தயாராகி வருகிறார்.

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பா.ஜ.க. வுடன் மீண்டும் கூட்டணி அமைத்து உள்ள அ.தி.மு.க., இந்த கூட்டணியில் மேலும் பல கட்சிகளை சேர்த்து பலமான கூட்டணியாக உருவாவதற்கு வியூகம் வகுத்து உள்ளது.

இதைத் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதற்காக ரகசிய பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விஜய், திருமாவளவன் இருவரும் கூட்டணிக்கு வந்து விட்டால் அ.தி.மு.க. அணி வலுவானதாக மாறி விடும் என்கிற எண்ணத்தில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அ.தி.மு.க.வினர் தெரிவித்து உள்ளனர்.

இதற்காக விஜய், திருமாவளவன் இருவருக்கும் கூட்டணியில் உரிய முக்கியத்துவத்தை கொடுப்பதற்கு அ.தி.மு.க. தலைவர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2 துணை முதலமைச்சர் பதவியை உருவாக்கி இருவருக்கும் பிரித்து கொடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரட்டை இலக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதி கொடுப்பதற்கு அ.தி.மு.க. தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருப்பதால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கு திருமாவளவன் தயக்கம் காட்டி வருகிறார். இருப்பினும் அவரை சமாதானப்படுத்தி கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் சத்தமில்லாமல் நடைபெற்று வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.

அதே நேரத்தில் தி.மு.க.வுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் விடுதலை சிறுத்தைகளை எப்படியாவது கூட்டணியில் சேர்த்து விட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியுடன் உள்ளார்.

முக்கிய பிரமுகர்கள், அ.தி.மு.க. ஆதரவு அதிகாரிகள் ஆகியோர் மூலமாக விஜய்யுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகி கூறியதாவது:-

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிக்கு எதிரான மனநிலையில் உள்ள அனைத்து கட்சிகளையும் அ.தி.மு.க. அணியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக பல்வேறு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் அ.தி.மு.க. கூட்டணியை விரைவாக வலுப்படுத்திவிட வேண்டும் என்பதே பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எண்ணமாக உள்ளது. வருகிற தேர்தலில் அது நிச்சயம் நிறைவேறி அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News