தமிழ்நாடு

வெள்ள பாதிப்புக்கு கூடுதல் நிவாரண உதவி கேட்க அமைச்சர் உதயநிதி டெல்லி செல்கிறார்?

Published On 2023-12-13 07:02 GMT   |   Update On 2023-12-13 07:02 GMT
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை சந்திக்கும் மத்திய குழுவினர் அதன்பிறகு சேத விவரங்களை டெல்லிக்கு சென்று அறிக்கையாக சமர்பிக்க உள்ளனர்.
  • வெள்ளம் வடிந்துள்ள நிலையில் சேத மதிப்பு அதிகமாகி உள்ளது.

சென்னை:

'மிச்சாங்' புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும்பாலான மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதில் ஏராளமான பொது மக்களுக்கு பொருட்சேதம் அதிகம் ஏற்பட்டுள்ளது.

வெள்ள சேதத்தை கணக்கிடுவதற்காக மத்திய குழுவினர் சென்னை வந்துள்ளனர். நேற்று முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பை கணக்கிட்டு வருகிறார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை சந்திக்கும் மத்திய குழுவினர் அதன்பிறகு சேத விவரங்களை டெல்லிக்கு சென்று அறிக்கையாக சமர்பிக்க உள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே முதற்கட்டமாக இடைக்கால நிவாரண தொகையாக ரூ.5060 கோடி வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். இப்போது வெள்ளம் வடிந்துள்ள நிலையில் சேத மதிப்பு அதிகமாகி உள்ளது.

எனவே கூடுதலாக நிவாரண நிதி கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மத்திய குழுவினர் டெல்லி சென்று அறிக்கை சமர்ப்பித்ததும் தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு ஆகியோர் டெல்லி சென்று கூடுதல் நிவாரண நிதி கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து புயல்-வெள்ள பாதிப்புக்கு கூடுதல் நிவாரண நிதியை வழங்குமாறு வலியுறுத்த உள்ளதாகவும், என்னென்ன சேதத்துக்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்ற விவரங்களுடன் பட்டியலை கோரிக்கை மனுவாக வழங்க உள்ளதாகவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Tags:    

Similar News