களத்தில் இல்லாதவர்... ஈரோடு கடப்பாரை பெரியார் - சீமானை மறைமுகமாக சீண்டிய விஜய்
- களத்தில் இல்லாதவர்களை எதிர்ப்பதற்கான எந்த ஐடியாவும் இல்லை என்று விஜய் தெரிவித்தார்.
- அண்மைய காலமாக விஜயை சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரசார வாகனத்தில் ஏறிநின்று கையசைத்த விஜயை கண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
இக்கூட்டத்தில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், "ஈரோட்டில் பிறந்த தந்தை பெரியார் நமது கொள்கை தலைவர். ஈரோடு கடப்பாரை பெரியார். தமிழ்நாட்டையே திருப்பிப் போட்ட நெம்புகோல். 100 ஆண்டுகளுக்கு முன்பே வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் கேட்டவர் பெரியார்" என்று புகழ்ந்து பேசினார்.
மேலும் பேசிய விஜய், "எதிரிகள் யார் என்று சொல்லிவிட்டுதான் வந்திருக்கிறோம். அதனால் அவர்களை மட்டும்தான் எதிர்ப்போம். அதுவும் 2026 தேர்தலில், களத்தில் இருப்பவர்களைதான் எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களையும், களத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லாதவர்களையும் எதிர்ப்பதற்கான எந்த ஐடியாவும் இல்லை" என்று தெரிவித்தார்.
காலத்தில் இல்லாதவர்களை எதிர்க்க மாட்டோம் மற்றும் ஈரோடு கடப்பாரை பெரியார் என்று விஜய் பேசியது சீமானை விமர்சிக்கும் வையில் உள்ளது என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ்-சின் 'விஜில்' அமைப்பு சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா மற்றும் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பாரதியார் குறித்தும், பெரியார் குறித்தும் பேசியிருந்தார். "பார்ப்பனர் என்ற கடப்பாரையை கொண்டு திராவிடத்தை இடித்து தள்ளுவேன்" என்று அவர் பேசியிருந்தார்.
பார்ப்பனர் என்ற கடப்பாரையை கொண்டு திராவிடத்தை இடித்து தள்ளுவேன் என்று சீமான் பேசியதற்கு எதிர்வினையாக தான் ஈரோடு கடப்பாரை பெரியார் என்று விஜய் பேசியுள்ளதாக இணையத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.