தமிழ்நாடு செய்திகள்

உதயநிதியை முதலமைச்சராக்க முயற்சிக்கும் ஸ்டாலின் முயற்சி நடக்காது: எடப்பாடி பழனிசாமி

Published On 2023-11-30 13:17 IST   |   Update On 2023-11-30 15:02:00 IST
  • அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் 40 சதவீதம் விலை உயர்ந்துவிட்டது.
  • அ.தி.மு.க. ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

சேலம்:

சேலம் மாநகர் மாவட்டத்திலுள்ள பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய இஸ்லாமிய மக்கள் 500 பேர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இதைத்தொடர்ந்து மசூதியில் இஸ்லாமியர்களுடன் இணைந்து தொழுகை மேற்கொண்டார். இதனிடையே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 520 வாக்குறுதிகளை செயல்படுத்தி நடைமுறைப்படுத்துவோம் என்று தேர்தல் நேரத்தில் தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். தி.மு.க. ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டு காலம் ஆகிவிட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த நன்மை என்னவென்றால் கேள்விக்குறியாக தான் உள்ளது. மேலும் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் ஏதோ சிலவற்றை மட்டும் நிறைவேற்றிவிட்டு 520 அறிவிப்புகளையும் நிறைவேற்றிவிட்டதாக பொய்யாக சொல்லி வருகிறார். இது விஞ்ஞான உலகம், எதை சொன்னாலும் மக்கள் கேட்பதற்கு தயாராக இல்லை; குறிப்பாக 100 சதவீதம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக தி.மு.க. அரசாங்கம் மார்தட்டி வருகிறது.தமிழக முதல்வர் முழுபூசணிக்காயை சோற்றில் மறைத்து வருகிறார். அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் 40 சதவீதம் விலை உயர்ந்துவிட்டது. இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாது. அதிமுக மக்களுடன் மக்களாக வாழ்ந்து வருவதால் மக்களின் சிரமங்கள், துன்பங்கள் அனைத்தும் அறிந்து இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.


தற்போது உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக கொண்டு வரவேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்; நிச்சயம் இது நடக்காது.

அ.தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் சாதாரண தொண்டன் பொதுச்செயலாளர் கூட வரமுடியும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகுத்து கொடுத்த கொள்கையில் இருந்து ஒரு புள்ளி அளவும் அதிமுக மாறாது. அதிமுகவைப் பொறுத்தவரைக்கும் ஜாதி, மதம், பேதம் கிடையாது; அனைவரும் ஒன்று என்று கருதக்கூடியது. அதிமுகவின் அவைத்தலைவர் ஒரு இஸ்லாமியர் என்று பெருமிதம் தெரிவித்தார். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் அதிமுகவை ஆதரிக்க வேண்டும்.

40 பாராளுமன்ற தொகுதிகளிலும் அதிமுகவையே இஸ்லாமிய மக்கள் ஆதரவு தந்து வெற்றி பெறசெய்ய வேண்டும். இஸ்லாமிய மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்க அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறு ஆதரித்தால் உங்களுடைய ஒவ்வொருவரின் குரல் பாராளுமன்றத்தில் நிச்சயம் ஒலிக்கும் என்றும் உறுதியளித்தார்.

Tags:    

Similar News