தமிழ்நாடு

மோடி 100 முறை தமிழகம் வந்தாலும் ஜெயிக்க முடியாது- வைகோ

Published On 2024-04-17 03:52 GMT   |   Update On 2024-04-17 03:52 GMT
  • தமிழகம்-புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.
  • தேர்தலையொட்டி பிரதமர் மோடி 9 முறை தமிழகத்துக்கு வந்து இருக்கிறார்.

கோவை:

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கோவை வி.கே.கே.மேனன் சாலையில் நடந்த இந்தியா கூட்டணி கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்திய திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தமிழகம்-புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். இதை யாராலும் மாற்ற முடியாது.

தேர்தலையொட்டி பிரதமர் மோடி 9 முறை தமிழகத்துக்கு வந்து இருக்கிறார். அவர் 9 முறை அல்ல, 100 முறை தமிழகம் வந்தாலும் எதுவும் செய்ய முடியாது.

தமிழகம் வந்த பிரதமர் மோடி, திராவிட இயக்கத்தை அழித்து விடுவேன் என்று பேசி உள்ளார். ஒரு பெரிய பதவியில் இருந்து கொண்டு இப்படி பேசுவது அந்த பதவிக்கு அழகல்ல. இந்த திராவிட இயக்கம் ரத்தம் சிந்தி தோன்றியது. ஆதிக்கவாதிகளிடம் இருந்து மக்களை பாதுகாக்க தோன்றிய இந்த இயக்கத்தை காப்பதற்கு பலர் தங்களது இன்னுயிர்களை சிந்தி உள்ளனர். இந்த இயக்கத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள்.


திராவிட இயக்கம் என்றால் அண்ணா தொடங்கிய தி.மு.க., எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. தான். இந்த இயக்கத்தை எவராலும் அழிக்க முடியாது. நமது நாட்டில் பிரதமர் என்ற பதவியில் பலர் இருந்துள்ளனர். பாரதிய ஜனதாவைச் சேர்ந்த வாஜ்பாயும் இருந்துள்ளார். அவர் அற்புதமான தலைவர். ஆனால் தற்போது இருக்கும் பிரதமர் மோடி, ஆணவத்தில் இருக்கிறார். இப்படிப்பட்ட பிரதமரை நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை.

நாங்கள் இதுபோன்று எத்தனையோ பேரை பார்த்து விட்டோம். உங்கள் பயமுறுத்தல் எல்லாம் எங்களிடம் பலிக்காது. இங்கு அந்த கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேர்தல் விதிகளை மீறி பேசி வருகிறார். அவர் முன்னாள் போலீஸ் அதிகாரியாக இருந்தவர். அவருக்கு விதிமுறைகள் எல்லாம் தெரியாதா?

தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள காலை உணவுத்திட்டம், கனடா நாட்டில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இப்படி பிற மாநிலத்துக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் கடைபிடிக்கும் திட்டமாக இருக்கிறது. கோவை மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்கள். இது தொழிலாளர்களின் கோட்டை. எனவே நீங்கள் அனைவரும் உதய சூரியனுக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News